பெரம்பலூர்

துறைமங்கலத்தில் 20 நாள்களுக்கும் மேலாக குடிநீர் வராததால் தெரு தெருவாய் தண்ணீருக்காக அலைந்த மக்கள் வெற்றுக் குடங்களால் சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் மாரியம்மன் கோவில் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீருக்காக தெரு தெருவாக மக்கள் அலைந்துத் திரிந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும், கிணற்று நீரும் விநியோகம் செய்யப்படாததால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று வெற்றுக் குடங்களை துறைமங்கலம் பகுதி சாலையின் நடுவே வைத்து மறியல் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் காவலாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர், அப்பகுதி மக்களுக்கு லாரி மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.

இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.