2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராகிவிட்டது. இதற்காக, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அறிவித்துள்ளார். இந்தக் குழு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் அறிக்கையை உருவாக்கும்.

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக இப்போதே தயாராகிவிட்டது. தேர்தலுக்கான மிக முக்கியமான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

10 பேர் கொண்ட குழு

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வடிவமைக்க 10 மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.

இக்குழுவில் பொன்னையன், டி. ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், சி.வி. சண்முகம், செம்மலை, பி. வளர்மதி உள்ளிட்ட 10 பேர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மாநிலம் தழுவிய பயணம்

இந்தக் குழு வெறும் ஆலோசனையுடன் நின்றுவிடாமல், நேரடியாகக் களத்தில் இறங்கத் திட்டமிட்டுள்ளது. "இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். விவசாயிகள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் நேரில் சந்தித்து அவர்களின் கருத்துக்கள் மற்றும் தேவைகளைக் கேட்டறியும்.

மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வகையிலும், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறைவேற்றும் வகையிலும் ஒரு வலுவான தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுகவின் பிளான் என்ன?

ஆளுங்கட்சியான திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி வரும் அதிமுக, 2026 தேர்தலில் மக்களைக் கவரும் வகையில் அதிரடித் திட்டங்களை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது.

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்ட நிலையில், இந்தக் குழுவின் அறிவிப்பு அக்கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.