அதிமுகவின் 'தொண்டர் உரிமை மீட்புக் குழு' கூட்டத்தில் பேசிய ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் இனி இணைவதற்கு வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக அறிவித்தார். 'தை பிறந்தால் வழி பிறக்கும்' எனத் தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார்.
அதிமுகவின் 'தொண்டர் உரிமை மீட்புக் குழு' ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் இணைவதற்கு இனி வாய்ப்பே இல்லை என்றும், அவரைத் தீவிரமாக விமர்சித்தும் உரையாற்றினார்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்ற இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுகவின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி மீது கடும் தாக்கு
கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியின் தலைமையைக் கடுமையாகச் சாடினார்.
"பழனிசாமி பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு சந்தித்த 11 தேர்தல்களிலும் அதிமுக தொடர்ந்து தோல்வியைத் தழுவியுள்ளது. அவரது தவறான முடிவுகளால் பல தொகுதிகளில் கட்சி டெபாசிட் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது” என்றார்.
மேலும், "எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கட்டிக்காத்த மாபெரும் இயக்கத்தைப் படுபாதாளத்தில் தள்ளியவர் எடப்பாடி பழனிசாமிதான். அவரது பெயரைச் சொல்வதற்கே நான் வெட்கப்படுகிறேன்," என ஆவேசமாகத் தெரிவித்தார்.
"தை பிறந்தால் வழி பிறக்கும்"
கூட்டத்தில் பேசிய அனைவரும் "இனி இபிஎஸ் உடன் சேரக் கூடாது" என்ற ஒற்றைக் கருத்தை முன்வைத்த நிலையில், அதை வழிமொழிந்த ஓபிஎஸ், "தை பிறந்தால் நிச்சயம் வழி பிறக்கும்" எனத் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்தார்.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேசுகையில், "எடப்பாடி பழனிசாமியின் கையில் அதிமுக என்பது குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக மாறிவிட்டது. அதைச் சிதைத்துச் சின்னபின்னமாக்கி வருகிறார். வரும் தேர்தலில் அவர் டெபாசிட் இழப்பது உறுதி," எனத் தெரிவித்தார்.


