புதுக்கோட்டை

பொன்னமராவதியில் வயல்வெளியில் அமைத்த சாராயக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, ஆலவயல் அருகே உள்ள தூத்தூர் மலையின் வடபுறத்தின் வயல்வெளியில் சமீபத்தில் அரசு சாராயக் கடை ஒன்று அமைக்கப்பட்டது. 

இந்தக் கடையின் அருகே கோயில், குடியிருப்புகள் உள்ளது. குடிகாரர்களால இக்கடையைச் சுற்றிலும் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. மக்கள், பள்ளி மாணவ, மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த காரணங்களால் ஆலவயல் பகுதி மக்கள் ஆலவயல் - கொப்பனாபட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த டாஸ்மாக் உதவி மேலாளர் சாலை தவவளவன், வட்டாட்சியர் எஸ்.சங்கர், காவல் ஆய்வாளர் ஆர்.கார்த்திகைசாமி ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சாராயக் கடையை நிரந்தரமாக மூட அளித்த உறுதியின்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த சாலை மறியலால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.