People struggle for not giving the salary for last six months

கடலூர்

ஆறு மாதங்களாக 100 நாள் வேலைத் திட்டத்துக்கான கூலியை வழங்காமல் இழுத்தடித்து வரும் வங்கியைக் கண்டித்து பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்டது சேமக்கோட்டை ஊராட்சி.

இந்தப் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இங்கு வேலை செய்யும் பயனாளிகள், அங்குள்ள செட்டிப்பாளையத்தில் இயங்கி வரும் வங்கியில் வேலைக்கான பணத்தைப் பெற்று வந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களாக 100 நாள் வேலைத் திட்டத்துக்கான கூலியை வழங்காமல் இழுத்தடித்து வருவதாகவும், வேறு வங்கிக் கிளைக்கு கணக்குகளை மாற்றிக் கொள்ளுமாறும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுலவர் ஜெயக்குமாரி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ஒரு வார காலத்துக்குள் பணி செய்ததற்கான கூலியை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, மக்கள் தங்களது ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.