நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் முதல்வருக்கு மறைவுக்குப்பின், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்கள் திறக்கப்பட்ட நிலையில் பணம் எடுக்க மீண்டும் சாலைகளில் இருக்கும் ஏ.டி.எம்கள் மற்றும் வங்கிகளுக்கு சென்று மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையைத் தொடங்கினர்.
மத்திய அரசு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பை வெளியிட்டு இன்றுடன் (வியாழக்கிழமை) ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனாலும், மக்கள் தங்களது வங்கி கணக்குகளில் இருந்து தாங்கள் நினைத்த தொகையை பெறமுடியாத நிலையும், ஏ.டி.எம்.களில் போதிய தொகை எடுக்க முடியாத நிலையும் இன்றும் தொடர்கிறது.
மத்திய அரசு ஒரு வாரத்திற்கு நிர்ணயித்துள்ள உச்சவரம்பு தொகையை மட்டுமே மக்களால் பெற முடிகிறது. அந்த தொகையையும் பணத்தட்டுப்பாடு நிலவும் வங்கிகளில் பெறமுடிவதில்லை.
இதனால் மக்கள் தினமும் தங்களது தேவைகளுக்காக வங்கிகளுக்கு படையெடுக்கின்றனர். வங்கிகள் மூலம் சம்பளம் பெறும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களும், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களும் இதே நிலைதான்.
இந்த நிலையில் கடந்த 4–ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையாக இருந்ததால் அன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மறுநாளே வங்கிகள் திறக்கப்பட்டது.
ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவின் காரணமாக அரசுத்துறை அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததைப்போல, வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனால் மக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிக்கு உள்ளானார்கள். ஏ.டி.எம்.களில் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் மூடப்பட்டு இருந்தன.
விடுமுறைக்குப் பிறகு நேற்று வங்கிகள் திறக்கப்பட்டன. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் அனைத்திலுமே கூட்டம் அலைமோதியது.
இதுவரை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய பணம் பெறாத ஓய்வூதியதாரர்கள், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் என பலதரப்பட்டவர்களும் பணம் எடுப்பதற்காக வங்கிகள் திறக்கப்படுவதற்கு முன்பே வந்து காத்திருந்தனர்.
நாகர்கோவில் டிஸ்டில்லரி சாலையில் உள்ள வடசேரி மாநில வங்கி கிளை முன்பு நேற்று காலை வங்கி திறப்பதற்கு முன்னதாகவே நீண்ட வரிசை இருந்தது.
சில வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் கேட்ட தொகை வங்கிகளில் வழங்கப்பட்டது. சில வங்கிகளில் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் அல்லது 4,500 வரையும், சில வங்கிகளில் ரூ.10 ஆயிரம் வரையும் பணம் வழங்கப்பட்டது. அதற்கு மேல் கேட்டவர்களுக்கு நாளை வாருங்கள் எனக்கூறினர் வங்கி அதிகாரிகள்.
ஏ.டி.எம்.களைப் பொறுத்தவரையில் நேற்று பெரும்பாலான வங்கி ஏ.டி.எம்.கள் திறந்திருந்தன. அவற்றில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் பணம் எடுத்துச் சென்றனர். சில இடங்களில் உள்ள ஏ.டி.எம்.கள் வழக்கம்போல் மூடியே கிடந்தன.
