2 நாள் பயணமாக வருகின்ற 4ம் தேதி தமிழகம் வரவுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட கூட்டணிக்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் இன்னும் 4 மாத காலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் பணியை முடுக்கி விட்டுள்ளன. ஆளும் கட்சியான திமுக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் முனைப்பில் தேர்தல் வியூகங்களை அமைத்து வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வலுவான கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பாஜக சார்பில் நியமனம் செய்யப்பட்டுள்ள பியூஸ் கோயல் அதிமுகவுடன் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் மேலும் சில கட்சிகளைக் கொண்டு வருவதில் வேகம் காட்டி வருகிறார். இதனிடையே 2 நாள் பயணமாக தமிழகம் வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணிக்கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த அக்டோபர் 12ம் தேதி மதுரையில் தொடங்கிய தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணமானது வருகின்ற 4ம் தேதி புதுக்கோட்டையில் நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவுக்கான ஏற்பாடு பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கூட்டணிக்கட்சி தலைவர்களான பழனிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வருவது தொடர்பாக பழனிசாமியுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று சொல்லப்படுகிறது.