புத்தாண்டு அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026-ம் புத்தாண்டின் முதல் நாளிலேயே அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் புத்தாண்டின் முதல் நாளில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ள செல்லூர் ராஜு, இன்று தனது குடும்பத்தினர் மற்றும் கட்சித் தொண்டர்களுடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.

மீண்டும் முதலமைச்சராக வேண்டும்

கோவில் தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசினார்.

“உலகமே ஆளுகின்ற மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குச் சென்று, குடும்பத்தாரோடும் கழகக் குடும்பத்தாரோடும் சென்றேன். மாண்புமிகு முதலமைச்சர் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வரவேண்டும். அதற்கு அங்கயற்கண்ணி மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள்புரிய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று பேசியிருப்பது அதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

Scroll to load tweet…

வைரல் வீடியோ

ஆனால், செல்லூர் ராஜுவின் இந்தப் பேச்சை திமுக ஐ.டி. பிரிவு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது. திமுகவின் உடன்பிறப்புகளும் இந்த வீடியோவை பதிவிட்டு கிண்டலாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

“புது வருஷத்தில் செல்லூர் ராஜு அவர்கள் பேசும் பொழுது என் காதில் தேன் வந்து பாய்கிறது முதல்வர் அவர்களுக்குகாக வேண்டிக்கொண்ட அண்ணன் என்றும் மாஸ் தான்... வருஷத்துல முதல் நாளே பயங்கரமா களை கட்டுதே...” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

“செல்லூர் ராஜு ஆழ்மனசுல இருக்கிறது வாய் வழியா” வந்திருச்சு என்று இன்னொரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.