கரூர்
 
கரூரில் அடைத்து வைக்கப்பட்ட வாய்க்காலை திறந்துவிடக்கோரி குளித்தலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டு பொதுமக்கள் நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி அலுவலக கட்டிடம் முன்பு அமர்ந்திருந்தனர்

இந்த முற்றுகைக்கு 10-வது வார்டின் முன்னாள் நகர் மன்ற உறுப்பினரான வழக்குரைஞர் சாகுல் அமீது தலைமை தாங்கினார். 

இதுகுறித்து அவர்கள், "குளித்தலை நகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டு பகுதியில் உள்ள பள்ளிவாசல் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம்.  இங்கு வசிப்பவர்களின் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இப்பகுதியில் அமைந்துள்ள வாய்க்கால் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், நேற்று தனிநபர் ஒருவர் தனது இடத்தின் வழியாக செல்லும் இந்த வாய்க்காலின் பாதையை அடைத்ததால் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கியது. அதனைத் தொடர்ந்து கழிவுநீர் தேங்கிக் கொண்டே வந்தது. இதனால், வாய்க்கால் முற்றிலும் நிரம்பி தெருவில் கழிவுநீர் செல்லும் நிலை ஏற்படும். இதனால் பல வகைகளில் நாங்கள் பாதிக்கப்படுவோம். 

எனவே, அடைத்து வைக்கப்பட்ட வாய்க்காலை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இந்தப் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம்" என்று அவர்கள் கூறினர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி ஆணையர் சையத்முஸ்தபாகமால் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று வாய்க்காலை அடைத்த இடத்தை பார்வையிட்டனர். 

அதன்பின்னர், "அவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு,  பொக்லைன் எந்திரத்தையும் வரவழைத்து வாய்க்கால் திறந்துவிடப்பட்டது". 

இதனைப் பார்த்த பொதுமக்கள் அதனை கைதட்டி வரவேற்றனர். தங்கள் முற்றுகைப் போராட்டத்தையும் கைவிட்டனர்.