வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் அமமுக சார்பில் தாம் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை உருவாக்கி உள்ளது.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்று முடிவாகிவிட்டதா..? தமிழகத்தில் உள்ள கூட்டணிக்கட்சிகளும், கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ள கட்சிகளும் அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நண்பர் அண்ணாமலை என்னிடம் தொலைபேசியில் பேசும்போதும், நேரில் பேசும்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுப்பது உண்மை தான். ஆனால் இது தொடர்பாக நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை.
ஆண்டிப்பட்டி தொகுதியை அமமுகவுக்கு வழங்கினால் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். இல்லையென்றால் தனியாக தேர்தலை சந்திப்போம். ஆண்டிப்பட்டியில் நான் போட்டியிடுகிறேன். அமமுகவில் தகுதியான வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கின்ற கூட்டணிக்கு தான் நாங்கள் செல்ல முடிவு செய்துள்ளோம். தை மாதத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிக்க வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.


