Asianet News TamilAsianet News Tamil

தமிழக அரசு அதிரடி நடவடிக்கை: தனியார் பேருந்துகளில் டிக்கெட் விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைக்கு பிறகு தனியார் பேருந்துகளின் டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

People happy over omni buses ticket prices reduced after tn govt string action smp
Author
First Published Oct 23, 2023, 10:13 AM IST | Last Updated Oct 23, 2023, 10:13 AM IST

பண்டிகை, விடுமுறை காலங்களில் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கினாலும், அதிக அளவிலான மக்கள் சொந்த ஊர் செல்வதால், அந்த பேருந்துகள் போதுமானதாக இருப்பதில்லை. இதனால், பெரும்பாலான மக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். அவ்வாறு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்க அரசு முயற்சிகள் மேற்கொண்டாலும் கட்டணக் கொள்ளை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், வார இறுதி நாட்கள், விஜயதசமி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி இயக்கப்பட்ட தனியார் பேருந்துகளிலும் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. அதன் தொடர்ச்சியாக, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக கடந்த 19,20 ஆகிய தேதிகளில் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு 102 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, அபி பஸ், ரெட் பஸ், மேக் மை ட்ரிப் போன்ற பிரபலமான ஆன்லைன் முன்பதிவு தளங்களில் டிக்கெட் கட்டணம் கடந்த சில நாட்களாக வெகுவாகக் குறைந்துள்ளது. திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை மற்றும் பிற மேற்கு, தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கான டிக்கெட்டுகளின் விலை ரூ.1300 முதல் ரூ.2500 வரை விற்கப்பட்டுள்ளது. வழக்கமாக, இந்த வழித்தடங்களில் ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை டிக்கெட்டுகளின் விலை இருக்கும்.

தனியார் பேருந்துகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதற்கான சட்ட விதிகள் ஏதும் இல்லை என்று கூறி, அதிக கட்டணம் வசூலிக்கும் விவகாரத்தில் இதுவரை போக்குவரத்துத் துறை தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. பயணிகளின் குறிப்பிட்ட புகார்களின் அடிப்படையில் மட்டுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்துக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிப்பதில் சட்ட ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் சிக்கல்கள் உள்ளன. மத்திய மோட்டார் வாகன சட்டம் மற்றும் மாநில மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்கள் அவசியம்,” என்றார். கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கு முன், பேருந்துத் துறை எதிர்கொள்ளும் சிக்கல்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் சுமார் 5 லட்சம் பயணிகள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் மொத்தம் 3.1 லட்சம் பயணிகள் அரசுக்கு சொந்தமான SETC மற்றும் TNSTC பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர் என்று SETC இன் அறிக்கை கூறுகிறது.

கடந்த மாதம் பள்ளி விடுமுறையின் போது, கோவையில் இருந்து சென்னைக்கு ஏசி ஸ்லீப்பர் பெர்த் டிக்கெட் விலை ரூ.4,200க்கு விற்கப்பட்டதாக பேருந்துகளில் வழக்கமாக பயணம் செய்யும் பயணிகள் தெரிவித்தனர். ஆனால், ஆயுதபூஜை, விஜயதசமி, வார இறுதி நாட்கள் என விடுமுறை நீட்டிக்கப்பட்டாலும், திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் கோவையில் இருந்து சென்னை திரும்புவதற்கான டிக்கெட் கட்டணம் ரூ. 1,300 முதல் 2,000 வரை இருப்பதாகவும், இதற்கு முன் இப்படி நடந்ததில்லை என்றும் பேருந்து பயணி ஒருவர் கூறுகிறார்.

ஆதரவும் இல்லை, ஒத்துழைப்பும் இல்லை..! பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன்- நடிகை கவுதமி

“பல ஆண்டுகளாக ஆன்லைனில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தாலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. மாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கான அதிக தேவையை கருத்தில் கொண்டு, இந்த கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் நிரந்தர தீர்வுக்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய வேண்டும்.” என பேருந்து ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் மறுத்துள்ளார். “102 பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டதால் 4,000 பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பேருந்துகளுக்கு அபராதம் விதிக்க ஆர்டிஓக்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 50,000 முதல் 65,000 பயணிகளுக்கு சேவை செய்து வருகிறோம். போக்குவரத்து துறை விதிகளை கடைபிடிக்கும் பேருந்துகளுக்கு இடையூறு செய்யக்கூடாது. இந்தப் பிரச்னையில் தலையிடக் கோரி முதல்வரிடம் மனு அளித்துள்ளோம்.” என்று அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios