People fought for against tasmac liquor shop till night 11
கோயம்புத்தூர்
சித்தாபுதூரில் சாராயக் கடையை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து இரவு 11 மணிவரை மக்கள் போராடினர், அவர்கள் மீது காவலாளர்கள் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து மூடப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடைகளை, குடியிருப்புப் பகுதிகளிலும், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயும் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கு மக்கள் எதிர்ப்பத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை சித்தாபுதூர் சின்னசாமி சாலை, தனலட்சுமி நகர் மின்மயானம் எதிரில் புதிதாக சாராயக் கடையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்று சாராயக் கடை அமைப்பதற்குத் தேவையானப் பொருட்கள் கடைப் பகுதியில் வந்திறங்கியது.
இதுபற்றி தகவலறிந்ததும், மக்கள் கலை இலக்கிய அமைப்பினர், மக்கள் அதிகார அமைப்பினர் மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் திரளாக சாராயக் கடை முன்பு முற்றுகையிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பின்னர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதித்தது. இதுபற்றியத் தகவலறிந்ததும் கோவை ரேஸ்கோர்ஸ் காவலாளர்கள் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உறுதியான பதில் கிடைத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று போராட்டகாரர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.
அப்போது அங்கிருந்த மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் வினோத்குமார் உள்பட ஐந்து பேரை குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து வெளியேற்ற காவலாளர்கள் முயன்றனர். அதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டதால் காவலாளர்கள் தடியடி நடத்தினர்,
இதனையடுத்து மூர்த்தி, வினோத்குமார் உள்பட ஐந்து பேரை வேனில் ஏற்றி காவலாளர்கள் அழைத்துச் சென்றதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவலாளர்களைக் கண்டித்து மீண்டும் முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டம் இரவு 11 மணி வரை நீடித்தது. அதன்பிறகு தான் மக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
சாராயக் கடைகளை மாற்றும்போது, அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் அங்கு சாராயக் கடைகளை அமைக்க கூடாது என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பு. நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமலும், தன்னிச்சையாக செயல்பட்டும் போராட்டம் நடத்தும் மக்களின் மீது தடியடி நடத்துவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
