- Home
- Tamil Nadu News
- எடப்பாடியை கவிழ்க்க ஓபிஎஸ்... ஸ்டாலின் அதிரடி வியூகம்..! தென்மாவட்டங்களில் செக்..!
எடப்பாடியை கவிழ்க்க ஓபிஎஸ்... ஸ்டாலின் அதிரடி வியூகம்..! தென்மாவட்டங்களில் செக்..!
‘‘ஓபிஎஸ் என்றாலே இரட்டை இலை சின்னம் என்ற எண்ணம், முக்குலத்தோர் சமுதாய மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்து விட்டது.''

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கைவிரித்து விட்டார். தனி கட்சி துவங்கினால் கூட்டணியில் சேர்த்து 'சீட்' வழங்குவதாக ஓபிஎஸிடம் டெல்லி பாஜக தலைமை அறிவுறுத்தியது. இதை ஓபிஎஸ் நிராகரித்து விட்டார். இதையடுத்து, ஓபிஎஸை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த திமுக தலைமை வியூகம் வகுத்து வருகிறது. அவரை கூட்டணியில் சேர்த்து, மூன்று தொகுதிகள் வழங்கவும் பரிசீலித்தது.
இதன் மூலம் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்கும் என திமுக கணக்கு போட்டது. இந்நிலையில், திமுகவில் ஓபிஎஸ் சேர்ந்தாலோ அல்லது கூட்டணி வைத்தாலோ, அவரது ஆதரவு ஓட்டுகள் திமுவிற்கு கிடைக்காது என திமுக நடத்திய ரகசிய சர்வேயில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, திமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘ஓபிஎஸ் என்றாலே இரட்டை இலை சின்னம் என்ற எண்ணம், முக்குலத்தோர் சமுதாய மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்து விட்டது. இதனால் தான், கடந்த மக்களவை தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். மேலும், அவரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக தென் மாவட்ட மக்கள் பார்க்கின்றனர். எனவே, திமுகவில் ஓபிஎஸ் சேர்ந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால், வழக்கமாக அவருக்கு கிடைக்கும் ஓட்டுகள் கிடைக்காது.
அதே நேரத்தில், அதிமுகவில் இருந்து ஓரங்கப்பட்ட ஓ.பி.எஸ் தனித்து நின்றால், அவர் மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்படும். அதிமுக ஆதரவு ஓட்டுகளை அவர் பிரிப்பதால், திமுக வெற்றியை எளிதாக்கும். ஓபிஎஸ் போட்டியிடாமல் ஒதுங்கினாலும், இதுதான் நடக்கும். எனவே, ஓபிஎஸை தனித்து நிற்க வைக்கும் முடிவுக்கு, திமுக தலைமை வந்துவிட்டது’’ எனக் கூறினார்.
