காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் பாசிகள் படர்ந்து குப்பை கழிவுகளால் சூழ்ந்திருக்கும் குளங்களை சீரமைக்க வேண்டும் என்றும் குளத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அடுத்த காட்ரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள மேட்டுத் தெரு பகுதியில் அருகருகே இரண்டு பெரிய குளங்கள் உள்ளன. 

தற்போது இந்த குளங்கள் பாசிகள் படர்ந்து குப்பைகளுடன் புதர் மண்டி இருக்கிறது. இதனால் இந்த பகுதியில் நிலத்தடிநீர் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், மக்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படும் நிலையும் உண்டாகி உள்ளது. 

இதுகுறித்து  இப்பகுதி மக்கள் விடுத்துள்ள கோரிக்கை: "இங்குள்ள இந்த பழமையான குளங்களின் கரையை பலப்படுத்தி சுற்றியுள்ள குப்பைக் கழிவுகளை அகற்றி சீரமைத்தால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்து குடியிருக்கும் மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.

எனவே, குளத்தில் குப்பை கழிவுகளை கொட்டாமலும் அங்கு பாசிகளையும் புதர்களையும் அகற்றி குளத்தை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட பகுதிகளில் குப்பை கொட்டுவதற்கு குப்பை தொட்டிகள் அமைத்து தரவும், அங்கு குவிந்துள்ள குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அந்த கோரிக்கையில் தெரிவித்துள்ளனர்.