Asianet News TamilAsianet News Tamil

ரேஷன் பொருட்கள் பதுக்கல்: இந்த எண்ணில் புகார் அளிக்கலாம்!

ரேஷன் பொருட்கள் பதுக்கல், கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

People can complaint this number against Ration Items smuggling smp
Author
First Published Sep 12, 2023, 5:45 PM IST

அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு  பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.

அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள்  மீது கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம், 1980இன் படி அவ்வப்போது  தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த  ஒரு மாத காலத்தில் மட்டும், கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ.31,68,873 லட்சம் மதிப்புள்ள 3552 குவிண்டால்  பொது விநியோகத் திட்ட அரிசி, 203  எரிவாயு உருளைகள், 900  கிலோ கோதுமை,  1235 கிலோ துவரம் பருப்பு, 15 லிட்டர் மண்ணெண்ணெய், 100 பாக்கெட் பாமாயில் ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட  155 வாகனங்களும் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன.

மேலும், குற்றச்செயலில் ஈடுபட்ட 735 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கள்ளச்சந்தை தடுப்பு  மற்றும்  இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டம் 1980-ன்கீழ் 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவில்பட்டி அநீதி: சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுக - ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்!

இந்த நிலையில்,ரேஷன் பொருட்கள் பதுக்கல், கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் 1800 599 5950  என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios