Asianet News TamilAsianet News Tamil

சீரான குடிநீர் விநியோகம் கேட்டு மக்கள் சாலை மறியல்; கடுமையான போக்குவரத்து பாதிப்பு...

People asking for proper drinking water supply held in road block...
People asking for proper drinking water supply held in road block...
Author
First Published Mar 9, 2018, 9:55 AM IST


ஈரோடு

ஈரோட்டில் சீரான குடிநீர் விநியோகிக்க கோரி மக்கள் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி, கைக்காலன்குட்டை, கணபதி நகர் ஆகிய பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பவானிசாகர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பவானி ஆற்று குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், புங்கம்பள்ளியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலமும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படாததால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் புங்கம்பள்ளி, கைக்காலன்குட்டை, கணபதி நகர் ஆகிய பகுதியைச் சேர்ந்த மக்கள் ஒன்றுதிரண்டு புங்கம்பள்ளி பேருந்து நிறுத்தத்துக்கு நேற்று காலை 10.30 மணியளவில் வந்தனர். 

பின்னர், அவர்கள் அனைவரும் கோவை -  சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில்  உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் புஞ்சைபுளியம்பட்டி வட்டார வளர்ச்சி அதிகாரி சுமதி மற்றும் காவலாளர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது மக்கள், "எங்கள் பகுதிக்கு பவானி ஆற்று குடிநீர் எட்டு நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. அதுவும் எங்களுக்கு போதுமானதாக கிடைக்கவில்லை. மேலும் புங்கம்பள்ளியில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் வற்றிவிட்டதால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக எங்களுக்கு குடிநீர்  வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து சென்று தண்ணீர் பிடித்து வந்தோம்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். 

இதற்கு வட்டார வளர்ச்சி அதிகாரி சுமதி, "புங்கம்பள்ளி ஊராட்சி பகுதிகளுக்கு இன்னும் இரண்டு நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

இதனை ஏற்றுக்கொண்ட மக்கள் 11.30 மணியளவில் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios