ஏ.சி. கேரவனுக்காக முறையற்ற வகையில் மின்சாரம் எடுத்ததன் அடிப்படையில் நடிகர் தனுஷ் மீது அபராதம் விதிக்கப்பட உள்ளதாக ஆண்டிப்பட்டி மின்சார வாரியத்தின் தெற்கு மண்டல உதவி பொறியாளர் ராஜேஷ் கூறியுள்ளார்.

தேனி மாவட்டம், தேவாரம் அருகில் உள்ள சங்கராபுரத்தில் உள்ள கருப்பசாமி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். பின்னர், அருகேயுள்ள முத்துரெங்கபுரத்தில் இருக்கும் கஸ்தூரி மங்கம்மாள் கேயிலில் வழிபாடு நடத்தினார். தமிழகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 125 விவசாய குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் நிதியுதவி அளித்தார்.

கொலைகள் விழுந்த நிலம் என்ற குறும்படத்தைப் பார்த்த பிறகே, விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாக நடிகர் தனுஷ் கூறியிருந்தார்.

என் அம்மா பிறந்த இந்த சங்கராபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு உதவி செய்வதில் தனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக நெகிழ்ச்சியாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் தனுஷின் பயன்பாட்டுக்காக கொண்டு வரப்பட்ட கேரவனுக்கு, அனுமதியில்லாமல் மின்சாரம் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குலதெய்வ கோயிலுக்கு வழிபாடு செய்வதற்காக, நடிகர் தனுஷ், ஏசி வசதியுடன் கூடிய கேரவன் வேன் ஒன்று வந்தது என்றும், கேரவனுக்கு மின்சார இணைப்புக்காக அருகில் இருந்த, பொது மின்கம்பத்தில் இருந்து முறையற்ற வகையில் மின்சாரம் பெற்றதாகவும் தெரிகிறது.

இது குறித்து, ஆண்டிப்பட்டி மின்சார வாரியத்தின் தெற்கு மண்டல உதவி பொறியாளர் ராஜேஷ் கூறுகையில், கேரவனுக்காக 7 ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், முறையற்ற வகையில் மின்சாரம் எடுத்ததன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.