கோவை கார் வெடிப்பில் சிக்கிய பென் டிரைவ்.. 100க்கும் மேற்பட்ட ஐஎஸ் அமைப்பு வீடியோக்கள் - பரபரப்பு பின்னணி !
கோவையில், அக்டோபர் 23ம் தேதி கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில் பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த குண்டு வெடிப்பு பற்றி தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.
போலீசார் வட்டாரத்தில் விசாரித்த போது, சம்பவம் நடந்த தினத்தில், அதிகாலை, 4: 00 மணிக்கு வந்த கார், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் ஒன்றரை நிமிடம் நிற்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகளில் காண முடிந்தது. அதன் பிறகே கார் வெடித்துள்ளது.
கார் காத்திருந்த ஒன்றரை நிமிடத்தில், ஜமேஷா முபின் தான் கொண்டு வந்திருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். கார் வெடித்தவுடன், அந்த அதிர்ச்சியில், பூட்டப்பட்டிருந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் கதவு தானாக திறந்தது. கோவிலுக்குள் வசிக்கும் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், போலீசார் ஓடி வந்துள்ளனர்.
இதையும் படிங்க..இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்.. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு !
குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியில், கோவில் கண்காணிப்பு கேமராவில் அடுத்த இரண்டரை நிமிடங்களுக்கு காட்சிகள் எதுவும் இல்லை. அதன் பிறகே காட்சி பதிவாகியுள்ளது. கோவிலில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் தான் வழக்கில் துப்பு துலக்க பேருதவியாக இருந்தன என்றும் கூறியுள்ளார்கள். கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த கோவிலுக்கும், ஜமேஷா முபின் வசித்த வீட்டுக்கும் வெகு துாரம் இல்லை.
அதிகபட்சம், 300 மீட்டர் தான் இருக்கும். ஆனால், இறந்தவர் யார் என்றும், கார் யாருடையது என்றும், அப்பகுதி பொதுமக்கள் யாரும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. எந்த ஒரு தகவலும் தெரியாமல், கோட்டைமேடில் போலீசார் வீதி வீதியாக அலைந்தும் விபரம் கிடைக்காமல் தடுமாறினர். கார் வந்த வழித்தடம் கண்டறிவதற்காக, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததும் நடந்துள்ளது.
இறந்த முபினின் வீட்டில் இருந்து வெடி பொருட்கள், ஐ.எஸ். இயக்க வாசங்கள் அடங்கிய குறிப்புகள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மூலம் முபின் ஐ.எஸ். இயக்க ஆதரவாளராக இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதேபோல் கோவை மாநகரில் ஏற்கனவே என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்டவர்களின் வீடு, பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடுகளில் சந்தேகத்தின்பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க..டெல்லியை விஷவாயு அறையாக மாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால்.. பாஜக Vs ஆம் ஆத்மி இடையே உச்சக்கட்டத்தில் மோதல் !!
அப்போது குனியமுத்தூரில் ஏற்கனவே என்.ஐ.ஏவால் விசாரிக்கப்பட்டவரின் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் போலீசாருக்கு ஒரு பென்டிரைவ் கிடைத்தது. அந்த பென் டிரைவில், 100க்கும் மேற்பட்ட ஐ.எஸ். இயக்கத்தின் சித்தாந்தங்கள் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. பென்டிரைவில் உள்ள காட்சிகள் அனைத்தும் 2019ம் ஆண்டுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது. ஐ.எஸ். இயக்கத்தினர் மிக கொடூரமாக சிலரை கழுத்தை அறுத்து கொல்லும் காட்சிகளும் அதில் இடம் பெற்று இருந்தன.
ஐ.எஸ். இயக்கத்தின் பிரசார வீடியோக்கள், அவர்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்த வீடியோக்களும் இருந்துள்ளன. இதுதவிர இலங்கை குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளியான ஷக்ரான் ஹசீம் பேசிய வீடியோக்கள், 2019-ம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த தேவலாய குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விளக்கங்கள், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சுகள் போன்ற வீடியோக்களும் அதிகளவில் இருந்தன.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்களை காவலில் எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக கோவை போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் வெளியாகி இருக்கும் பல்வேறு தகவல்கள் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க..பாஜகவுக்கு தாவும் எடப்பாடி அணி.. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஊழல் பின்னணி.! பற்ற வைத்த ஓபிஎஸ் டீம் !!