Peacocks and monkeys invading farming crops

திருச்சி

திண்ணனூர் கிராமத்தில் காட்டுப் பகுதிக்குள் இருந்து வரும் மயில், குரங்குகள் விவசாய பயிர்களை தின்றும், சேதப்படுத்துவதாலும் பயிர்களைக் காப்பாற்ற மக்கள் கொளுத்தும் வெயிலில் நின்று விரட்டுகின்றனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியய்ர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார்.

முசிறி தாலுகா திண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கையில் நெற்பயிர்களை வைத்து கொண்டு திரளாக வந்து மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில், “திண்ணனூர் கிராமத்தின் அருகில் புலிவலம், ஓமாந்தூர், கரட்டாம்பட்டி, நடுவலூர் காட்டுப் பகுதிகள் உள்ளன.

இங்கிருந்து மயில், குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து விவசாயப் பயிர்களை சேதம் செய்கின்றன. இந்த வறட்சியான சூழ்நிலையிலும் நாங்கள் சிரமப்பட்டு மோட்டார் பாசனம் மூலம் விளைவித்த நெற்கதிர்களை குரங்குகள் தின்று விடுகின்றன.

ஏராளமான மயில்களும், குரங்குகளும் படை எடுத்து வருவதால் நாங்கள் பகல் முழுவதும் வெயிலில் நின்று பயிர்களை காப்பாற்ற வேண்டியது உள்ளது. அப்படியிருந்தும் ஒரு படி நெல்லோ தானியமோ வீட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளது.

இதுபற்றி நாங்கள் வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, எங்கள் பயிர்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

மனு கொடுக்க வந்தபோது அவர்கள் சேதம் அடைந்த பயிர்களை கையில் எடுத்து வந்திருந்தனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.