அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தால் இயக்கப்படும் குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்துகள, கிளாசிக், சாதாரண படுக்கை வசதி பேருந்துகளின் கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட 60 பேருந்துகளை கடந்த ஜீலை மாதம் முதல்வர் பழனிச்சாமி துவங்கி வைத்தார். நாகர்கோவில், தூத்துக்குடி, நெல்லை, மதுரை, திருச்சி, போடி, கீழக்கரை, கோவை, பெங்களூர், எர்ணாக்குளம், தஞ்சை, சேலம், திண்டுக்கல் உள்பட பல்வேறு நகரங்களுக்கு இந்த குளிர்சாதன பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கபப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்திருந்தனர். 

இதில், குளிர்சாதன படுக்கை வசதி பேருந்துகளுக்கு கி.மீ.,க்கு, ரூ.2. 25 பைசா சாதாரண படுக்கை பேருந்துகளுக்கு ரூ.1.55 பைசா, கழிப்பிட வசதியுடன் கூடிய கிளாசிக் பேருந்துகளுக்கு ரூ.1.15 பைசா என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இது ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை விட கூடுதலாக இருந்ததால், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாமல் இருந்து வந்தது. பல வழித்தடங்களில் குளிர்சாதன படுக்கை வசதி பேருந்துகள் ஆட்களின்றி இயக்கப்பட்டதால், பேருந்துகளை அதிகாரிகள் நிறுத்தினர்.  

இந்நிலையில் கட்டணத்தை குறைக்க அரசு அதிரடி முடிவு செய்துள்ளது. இதனையடுத்து திங்கள் முதல் வியாழன் வரை கட்டணத்தை குறைத்தும், வெள்ளி முதல் ஞாயிறு வரை பழைய கட்டணத்தை வசூலிக்கவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டார். 

அதன்படி, வார நாட்களில் குளிர்சாதன படுக்கை பஸ்களுக்கு, கி.மீ.,க்கு, 45 காசு குறைத்து, 1.80 ரூபாய், சாதாரண படுக்கை பஸ்களுக்கு, 20 காசு குறைத்து, 1.35 ரூபாய், கிளாசிக் பஸ்களுக்கு, 10 காசு குறைத்து, 1.05 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.