passenger death in government bus

பெங்களூருவிலிருந்து திருக்கோவிலூர் சென்ற வீரன் என்றவர், பேருந்திலேயே உயிரிழக்க, அதை அறிந்த பேருந்தின் நடத்துநர், உடலை நடு ரோட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த வீரன் என்ற கட்டிட மேஸ்திரி, பெங்களூருவில் வேலை பார்த்து வந்துள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால், நேற்று மதியம் தனது நண்பர் ராதாகிருஷ்ணனுடன் பெங்களூருவிலிருந்து அரசு பேருந்தில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

பேருந்தில் பயணிகள் குறைவாக இருந்ததால், ஒரு சீட்டில் படுத்து உறங்கியுள்ளார். ஓசூர் தாண்டி பேருந்து சென்றுகொண்டிருந்த போதும் வெகுநேரமாக சீட்டில் படுத்தே வந்துள்ளார். பேருந்தில் அதிகமான பயணிகள் ஏற, அவர்களை அமரவைக்கும் பொருட்டு, சீட்டில் படுத்திருந்த வீரனை எழுப்பியுள்ளார். 

ஆனால், நடத்துநர் எழுப்பும்போதும் வீரன், எழவில்லை. இதையடுத்து அவர் உயிரிழந்து விட்டதை அறிந்த நடத்துநர், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே வீரனின் உடலை நெடுஞ்சாலையிலேயே இறக்கிவிட்டு சென்றுள்ளார்.

வீரனின் உடலை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அவரது நண்பர் ராதாகிருஷ்ணன் தவித்துள்ளார். தகவலறிந்து வந்த சூளகிரி போலீசார், தனியார் அமரர் ஊர்தியை ஏற்பாடு செய்து வீரனின் உடலை சொந்த ஊரான திருக்கோவிலூருக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

பயணி இறந்தது தெரிந்தவுடன், அரசு மருத்துவமனையிலாவது சென்று இறக்கிவிடாமல், நடு ரோட்டிலேயே நடத்துநர் இறக்கிவிட்டு சென்றிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடத்துநரின் இந்த மனிதநேயமற்ற செயல் மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.