பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை அருகே பகுதிநேர நியாயவிலைக் கடை திறக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 62 பேரை காவலாளர்கள் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

திருமாந்துறை அருகேயுள்ள நோவா நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள குடும்ப அட்டைதாரர்கள், சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீரனூர் கிராமத்துக்குச் சென்று, அங்குள்ள நியாயவிலைக் கடையில் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்கி வருகின்றனர்.

மேலும், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது, விபத்து ஏற்பட்டு வருவதால் நோவா நகரில் பகுதிநேர நியாயவிலைக் கடை தொடங்க வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி பிரமுகர்களிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்தநிலையில், நோவா நகரில் பகுதிநேர நியாயவிலைக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இலப்பைக்குடிகாடு செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வருவாய்த் துறையினரும், மங்கலமேடு காவலாளர்களும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் 62 பேரை காவலாளர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர், மாலையில் விடுவிக்கப்பட்டனர்.