மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகள் தானம்... கண்கலங்க வைத்த படிக்காத ஏழை அப்பா அம்மா!!
விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்து நெகிழ வைத்துள்ள பெற்றோரின் செயலை கண்டு அந்த கிராம மக்களே கண்கலங்கி நெகிழ்ந்து போயுள்ளனர்.
ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் - அன்னக்கிளி தம்பதிக்கு நான்கு பிள்ளைகள். ராமதாஸ் கட்டட தொழிலாளியாகக் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரின் கடைசி மகன் விக்னேஸ்வரன். மெக்கானிக்கல் பட்டய படிப்பை முடித்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2 -ம் தேதி பட்டிணம்காத்தான் புறவழிச் சாலை பகுதியில் பைக் ஓட்டிச் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தில் சிக்கியுள்ளார். இதில் விக்னேஸ்வரன் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை அளித்தும் 6 நாட்களுக்குப் பின் சிகிச்சைப் பலனின்றி மூளைச்சாவு அடைந்துள்ளார்.
இந்நிலையை அறிந்த விக்னேஸ்வரனின் தந்தை தனது மனதைத் திடப்படுத்திக்கொண்டு மகன் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்ற நிலையில் தன் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார். இதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் விக்னேஸ்வரனின் கல்லீரல், இதயம், கண், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை சிகிச்சைக்காக காத்திருந்த 6 பேருக்கு அந்த ஏழைப் பெற்றோரின் மகன் விக்னேஷ்வரனின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டது.
21 வயது மகன் மூளைச்சாவு அடைந்த நிலையில், தன் மகனின் உடலில் இயங்கும் மற்ற உறுப்புகளை மாற்று நபர்களுக்கு பொருத்துவதன் மூலம் தன் மகன் இந்த உலகத்தில் வாழ்வான் என்ற எண்ணத்துடன் விக்னேஷ்வரனின் பெற்றோர் புத்திர சோகத்திலும் உறுப்பு தானத்தை செய்துள்ளனர். இதை அறிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் முழுமையான கல்வி அறிவு பெறாத கிராமத்து பெற்றோர்கள் தன் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோரின் நிலையைக் கருதி அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகமும் விக்னேஷ்வரனுக்கு அளித்த சிகிச்சைக்கான கட்டணம் கூட வாங்காமல் விக்னேஷ்வரனின் உடலைச் சொந்த ஊரான ராமநாதபுரத்துக்கு அனுப்பி வைத்தனர். விக்னேஸ்வரனின் உடல் உறுப்பு தானம் கொடுத்ததன் மூலம் முன் மாதிரியாகத் திகழ்ந்த விக்னேஸ்வரனின் பெற்றோரின் செயலை கண்டு அந்த கிராம மக்களே கண்கலங்கி நெகிழ்ந்து போயுள்ளனர்.