Asianet News TamilAsianet News Tamil

பரந்தூர் விமானநிலையமும்... விவசாயிகள் எதிர்ப்பும்.. பெரு வெள்ளத்தில் இருந்து அரசு பாடம் கற்றுக்கொண்டதா?

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் தங்கள் விளைநிலம், நீர்நிலைகள் பாதிக்கப்படுவதை காரணம் காட்டி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன

Paranthur Airport and farmers protest.. Has the government learned a lesson from the severe floods? Rya
Author
First Published Dec 27, 2023, 12:45 PM IST | Last Updated Dec 27, 2023, 12:45 PM IST

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சென்னையில் 2-வது விமான நிலையம் அவசியம் என்று கூறப்படுகிறது. இதற்காக காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. புதிய விமான நிலையம் அமைக்க 4700 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதற்காக பரந்தூர், மடப்புரம், வளத்தூர், நெல்வாய், தண்டலம் ஏகனாபுரம் உட்பட மொத்தம் 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்த வேண்டும்.

ரூ.20,000 கோடி முதலீட்டில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் தங்கள் விளைநிலம், நீர்நிலைகள் பாதிக்கப்படுவதை காரணம் காட்டி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டம் 500 நாட்களை கடந்து நடந்து வருகிறது. அமைச்சர்கள் நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் அதனை ஏற்றுக்கொள்ளாத பொதுமக்கள் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 6 கிராம சபை கூட்டங்களில் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தீர்மானமும் நிறைவேற்றி உள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் அரசு கையகப்படுத்த உள்ள அரசுக்கு சொந்தமான 1972 ஏக்கர் நிலத்தில் மொத்தம் 30-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருப்பதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஏற்கனவே வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் இருந்த நீர் நிலைகளை அழித்ததாலும், சென்னை மாநகரில் இருந்த ஏராளமான ஏரிகளை அழித்து குடியிருப்புகள் மற்றும் அரசு திட்டங்களை செயல்படுத்தியதாலும் ஏற்படும் பாதிப்புகளை கண் முன்னே அனுபவித்து வருகிறோம்..

இந்த மாத தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. ஆனால் எந்த புயலும் இல்லாமல் வெறும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. இப்படி ஊகிக்க முடியாத வானிலை அதிசயங்கள் நடந்து வருகின்றன. இந்த சூழலில் இயற்கையை அழித்து பரந்தூரில் விமான நிலையம் அமைக்க வேண்டுமா என்பதே அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில் காலநிலை ஆர்வலரும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலருமான ஜி. சுந்தரராஜன் இதுகுறித்து தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “சென்னை, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை பல்வேறு விஷயங்களை மீளாய்விற்கு உட்படுத்த சொல்கிறது. குறிப்பாக, நம்முடைய நீர்நிலைகள் மற்றும் அவற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகள்.

சென்னை, கடலூர், நாகை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை தனித்தனியான மாவட்டங்களாக பார்க்கமுடியாது. இந்த நான்கு மாவட்டங்களுக்கு மேற்கு பக்கமாகவுள்ள மாவட்டங்களின் வடிகால்தான் இவை நான்கும். அந்த அந்த பகுதிகளில் பெய்கின்ற மழைநீரை அங்கேயே பிடித்துக்கொண்டால், அதாவது காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் பகுதிகளில் பெய்யக்கூடிய மழைநீரை பிடித்துவைத்துக்கொண்டால் சென்னைக்கு வரக்கூடிய வெள்ளநீர் குறையும். அந்த வகையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு என அறிவிக்கப்பட்டுள்ள இடத்திலும், அதனை சுற்றிலும் உள்ள நீர்நிலைகளை இந்த வரைபடத்தில் காணலாம். இதில் விமான நிலையத்திற்குள் வரும் சில நீர்நிலைகளை அரசு பாதுகாக்கும் என்று சொல்கிறது.

 

நீர்ப்பிடிப்பு பகுதிகள் எல்லாவற்றையும் பாதுகாப்பது சாத்தியமா என்று தெரியவில்லை, அப்படி பாதுகாக்கவேண்டுமெனில் 2,500-3,000 ஏக்கர் நிலயத்தையாவது பாதுகாக்கவேண்டும். முதலில் அதற்கு ஒவ்வொரு நீர்நிலைக்கும் நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஆய்வு செய்யவேண்டும், அதன்பிறகே சாத்தியமா என்று முடிவுசெய்யமுடியும். சில நீர்நிலைகளுக்கான நீர்பிடிப்பு பகுதிகள் விமான நிலையத்திற்கு வெளியேயும் இருக்கலாம். 

சுமார் 80 நீர்நிலைகளை இணைக்கும் கம்பன் கால்வாய் சுமார் 7கிமீ தூரம் விமான நிலயத்திற்கென அறிவிக்கப்பட்டுள்ள நிலத்திற்குள் செல்கிறது, இதையும் எப்படிபாதுகாக்க முடியும் என தெரியவில்லை? பரந்தூர் விமான நிலையத்தை சுற்றியுள்ள நீர்நிலைகளை எப்படிபாதுகாக்க முடியும்? விமான நிலையம் வந்தால் அதோடு தொடர்புடைய, அலுவலகங்கள், மால்கள், ஏரோ ஹப், ஐந்து/மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் என எல்லாமும் வரும், அதற்கு எத்தனை நீர்நிலைகளை காவுவாங்கும் என தெரியுமா?” என்று குறிப்பிட்டுள்ளார்.

“சுவாசிக்க தூய்மையான காற்று வேண்டும்..” பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பெங்களூரு சிறுமி..

ஏற்கனவே இயற்கை மற்றும் நீர்நிலைகளை அழித்து கட்டிடங்களை கட்டியதன் விளைவாகவே பல இயற்கை பேரிடர்களை அடிக்கடி சந்தித்து வருகிறோம்.. சமீபத்தில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த அதி கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட கடும் வெள்ளம் ஆகியவற்றை அதற்கு உதாரணமாக சொல்லலாம். அரசு இந்த இயற்கை பேரிடர்களை படிப்பினையாக எடுத்துக்கொண்டு இந்த திட்டத்தை கைவிடப் போகிறதா அல்லது இனியும் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என்ற நீர்நிலைகளை அழிக்கப்போகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios