சென்னை போக்குவரத்து துறையின் தலைமையிடமான பல்லவன் இல்லத்தை போக்குவரத்து தொழிலாளர்கள் திடீரென முற்றுகையிட்டனர். சாலை மறியலும் நடந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வுதியம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டும் இன்றுவரை நடவடிக்கை இல்லை. மாதம் பிறந்து 6 நாட்கள் ஆனபின்னரும் பிரச்சனை தீராததால் நேற்று மாலை தொழிற்சங்க நிர்வாகிகள் போக்குவரத்து துறை செயலரை சந்தித்து இதுகுறித்து பேச வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

ஆனால் அவர் சந்திக்க மறுத்துவிட்டார். ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஓய்வூதியம் வரவில்லை.5 நாட்கள் ஆகியும் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை துறை அதிகாரியும் சந்திக்க மறுக்கிறார். அமைச்சரும் பார்க்க முடியாதவராக இருக்கிறார். 

இதனால் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு தீர்வு காண வேண்டும் என்று இன்று காலை சென்னை பொக்குவரத்து தலைமை அலுவலகமான பல்லவன் இல்லம் முன்பு கூடினர். பின்னர் திடீரென அலுவலகத்துக்குள் நுழைந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லவன் இல்லம் முன்பு சாலை மறியலும் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.  இது குறித்து போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: 

ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது குறித்து கேட்க , நேற்றைய தினம் சங்க நிர்வாகிகள் போக்குவரத்து செயலாளரை சந்திக்க சென்றனர். இன்று பார்க்க முடியாது என்று போய் விட்டார் அதனால் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஓய்வூதியம் திடீரென நிறுத்தப்பட்டது குறித்து கேட்டும் பதில் இல்லாததால் எங்களை சந்திக்கும் வரை இந்த முற்றுகை நீடிக்கும் என சிஐடியூ தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.