சொத்துக்காக வாலிபரை கொலை செய்து, பாலாற்றில் புதைத்த சடலத்தை 2வது நாளாக போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த வெண்புருஷம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கார்த்திக் (27). இவருக்கும் சுளேரிகாட்டு குப்பத்தை சேர்ந்த ரங்கீலா (21) என்பவருக்கும் கடந்த 3 மாதத்துக்கு முன் திருமணம் ஆனது. ரங்கீலாவின் உறவுமுறை அக்கா சூளேரிக்காட்டு குப்பத்தை சேர்ந்த ரஞ்சிதா. இவரது கணவர் டில்லிபாபு.
ரங்கீலாவுக்கும், ரஞ்சிதாவுக்கு பூர்வீக சொத்து சம்பந்தமாக தகராறு இருந்து வருகிறது. இதையொட்டி அவருக்கு திருமணம் ஆனவுடன், கணவன் கார்த்திக்கிடம், தனக்கு வரவேண்டிய சொத்தை பிரித்து தராமல் ரஞ்சிதாவும், டில்லிபாபுவும் இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கார்த்திக், ரஞ்சிதா மற்றும் டில்லிபாபு ஆகியோரிடம் கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது. இதையொட்டி கடந்த 8ம் தேதி, சொத்து தொடர்பாக பேச வேண்டும் என டில்லிபாபு, கார்த்திக்கை வரவழைத்தார்.
அதன்பேரில் அவர் அங்கு சென்ற கார்த்திக், பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து ரங்கீலா மற்றும் குடும்பத்தினர், சூளேரிக்காட்டு குப்பம் சென்று விசாரித்தபோது, அவர் பேசிவிட்டு வீட்டுக்கு சென்றதாக தெரிவித்தனர். பின்னர் கார்த்திக்கை பல இடங்களில் தேடினர். ஆனால், அவரை பற்றி எந்த தகவலும் இல்லை.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசில், கடந்த 23ம் தேதி ரங்கீலா புகார் செய்தார். போலீசார், மாயமான கார்த்திக்கை தேடி வந்தனர்.
இதற்கிடையில், கடந்த 27ம் தேதி மாலை டில்லிபாபு, செங்கல்பட்டு கோர்ட்டில் சரணடைந்தார். அங்கு நீதிபதியிடம், சொத்து தொடர்பாக பேசவந்த கார்த்திக்கை கொலை செய்து, பாலாற்றில் புதைத்ததாக கூறினார். இதையடுத்து நீதிபதி, டில்லிபாபுவை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து போலீசார், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.பின்னர், மதுராந்தகம் ஆர்டிஓ முன்னிலையில், நேற்று காலை முதல் மதுராந்தகம் அருகே பாலாற்று பகுதியில் புதைக்கப்பட்ட கார்த்திக் சடலத்தை தோண்டி எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் டில்லிபாபு, இரவு நேரத்தில் புதைத்ததால், எந்த இடம் என அவருக்கே தெரியவில்லை. மேலும், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், மணலை தோண்டி சடலத்தை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், நேற்று மாலை நேரம் ஆனதால், போலீசார் விட்டு சென்றனர்.
பின்னர் காவல் நிலையம் சென்ற போலீசார், டில்லிபாபுவிடம் புதைத்த இடம் பற்றி விசாரித்தபோது, “சார் நான் போதையில இருந்துட்டேன்…. அப்ப மப்பு அதிகமா இருந்துச்சா, சரிய கஸ் (guess) பன்னமுடில சார்” என கூறியுள்ளார். இதனால், போலீசார்
இந்நிலையில் இன்று காலை மீண்டும் பாலாற்றில் புதைக்கப்பட்ட சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு எல்லை பாலாற்று பகுதியில் புதைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், 2 ஆர்டிஓக்கள் முன்னிலையில், மாமல்லபுரம் டிஎஸ்பி சேகர் தலைமையில் போலீசார் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள டில்லிபாபு, சினிமா ஸ்டன்ட் குழுவில் உள்ளார். அஜீத்தின் கிரீடம் உள்பட 3 படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
