சுகாதாரத்துறை ஒப்பந்ததாரர் சுப்பிரமணியின் மர்ம மரணம் குறித்த வழக்கில் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் பழனியப்பன், அதிகாரிகளிடம் நேரில் விளக்கமளித்தார்.

நாமக்கல் மோகனூர் சாலையில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன். இவர், அரசு ஒப்பந்ததாரராக செயல்பட்டு வந்தார். அரசு கட்டிடங்கள், மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் உள்ளிட்டவற்றின் கட்டுமானப் பணிகளுக்கு பெரும்பாலும் இவர்தான் ஒப்பந்ததாரராக இருந்து வந்துள்ளார். 

ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமாக இருந்தவர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது, இவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக சென்னை வருமான வரித்துறை சுப்பிரமணியனுக்கும் சம்மன் அனுப்பியது. இதனை அடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த நிலையில்  தனது மோகனூர் தோட்டத்தில் இறந்த நிலையில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. ஒப்பந்ததாரர் சுப்பிரமணி, சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்து கிடந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சரும், பாப்பிரெட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினரான பழனியப்பனுக்கு சிபிசிஐடி போலீசார் இன்று காலை சம்மன் அனுப்பினர். சிபிசிஐடியின் சம்மனை அடுத்து, எம்.எல்.ஏ. பழனியப்பன், நாமக்கல்லி உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.

விசாரணை அதிகாரிகள் டி.எஸ்.பி. சத்தியமூர்த்தி, சிபிசிஐடி ஆய்வாளர் பிருந்தா ஆகியோர் முன்னிலையில் எம்.எல்.ஏ. பழனியப்பன் விளக்கமளித்தார். எம்.எல்.ஏ. பழனியப்பனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். 

விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ. பழனியப்பன், அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்ததாக கூறினார். மேலும், காவல் துறை தனது கடமையை செய்தது. நானும் என்னுடைய கடமையை செய்தேன் என்றும் எம்.எல்.ஏ. பழனியப்பன் தெரிவித்தார்.