தமிழகத்தில் தற்போது தங்கம், வெள்ளி விலை நிலவரம் போல கொலை நிலவரமும் செய்தியாக வந்து கொண்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தென்தமிழகத்தில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களை சந்தித்து வரும் அவர் இன்று காவல் துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட காவலாளி அஜித்குமாரின் வீட்டுக்கு நேரில் சென்று அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் திமுக ஆட்சி செய்யும்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய காவல் துறையே அஜித்குமாரை கொலை செய்துள்ளது. அஜித்தின் கொலை வழக்கை நீர்த்து போகச்செய்யும் வகையில் திமுக அரசு செயல்பட்டது.
அதிமுக போராட்டம் நடத்தியதன் விளைவாகவே இந்த வழக்கு சிபிஐ வசம் வழங்கப்பட்டள்ளது. தினமும் தங்கம், வெள்ளி விலை நிலவரம் செய்திகளில் வருவது போன்று கொலை, கொள்ளை நிலவரங்கள் செய்திகளில் வந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்போதும் கேள்விக்குறியாகவே இருக்கும்” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “அதிமுக சார்பில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது அடுத்த ஒருசில தினங்களில் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அஜித்குமாரின் சகோதரருக்கு அவர் விரும்பும் பகுதியில், அவர் விரும்பும் பணி வழங்கப்படும்” என்று உறுதி அளித்துள்ளார்.
