palanisamy overtake jayalalitha

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மாவட்டந்தோறும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. 

கரூரில் இன்று மாலை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்துகொள்கிறார். இதற்காக சென்னையிலிருந்து திருச்சி வழியாக கரூர் செல்கிறார் பழனிசாமி. 

முதல்வர் பழனிசாமி வருவதால், திருச்சியிலிருந்து கரூர் இடையேயான 75 கி.மீ தொலைவிற்கு போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து மணப்பாறை, அரவக்குறிச்சி வழியாக கரூர் செல்லும் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. இதனால் இரண்டு மடங்கு தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

பொதுவாக முதல்வர்கள் பயணத்தின்போது போக்குவரத்தை முடக்குவதும் வாகனங்களை திருப்பிவிடுவதும் வழக்கமான நடவடிக்கைதான். அதிலும் மறைந்த முன்னாள் ஜெயலலிதாவின் பயணத்தின்போது சற்று கூடுதலாக போக்குவரத்து முடக்கப்படுவதாக பொதுவான கருத்து நிலவியது. ஆனால் ஜெயலலிதாவையே மிஞ்சும் வகையில், முதல்வர்களின் பயண வரலாற்றிலேயே 75 கி.மீ தொலைவிற்கு போக்குவரத்து முடக்கப்பட்டது இதுவே முதன்முறையாக இருக்கும்.

அரசு, தனியார் பேருந்துகள், லாரிகள், கார்கள் என அனைத்து வாகனங்களும் திருப்பிவிடப்பட்டுள்ளன. எனவே இரண்டு மடங்கு தூரம் சுற்றிச் செல்வதால் பயண நேரமும் செலவும் அதிகரிப்பதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு ஆட்களை அழைத்து வர தனியார் பள்ளி பேருந்துகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. கரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பள்ளி குழந்தைகளை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு அழைத்து செல்லக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கூட்டம் காட்டுவதற்காக 100 நாள் வேலை திட்டத்தின் பயனாளிகளை அதில் கிடைக்கும் ஊதியத்தை விட அதிகமாக கொடுப்பதாகக் கூறி அழைத்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.