பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் 10ம் தேதி நடைபெறுகிறது.

உலக பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில். இக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக விஷேச நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் சொல்லவே வேண்டாம். இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். 

இதையும் படிங்க: தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை? லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க!

இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மஞ்சள் நிறத்தில் சேவல், மயில் பொறிக்கப்பட்ட கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. 

கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் அதிகாரிகள், பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி 10 ம் தேதியும், தைப்பூசத் திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சி 11ம் தேதி மாலையும் நடைபெற உள்ளது. 

இதையும் படிங்க: மக்களே உஷார்! கோர முகத்தை காட்டப்போகும் வெயில்! டேஞ்சர் அலர்ட் கொடுக்கும் வானிலை மையம்!

பத்து நாட்கள் நடைபெறக்கூடிய தைப்பூசத் திருவிழாவிற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பாதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காக 500க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் தங்கும் அறைகள், குடிநீர், கழிவறை, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகமும் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.