pakistan flags in puzhal prison
புழல் மத்திய சிறைச்சாலையில் தண்டனை, விசாரணை, பெண்கள் சிறை என 3 சிறைகள் உள்ளன. இங்கு சுமார் 4000 மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
புழல் சிறைச்சாலையில் அடிக்கடி கைதிகளிடம் இருந்து செல்போன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்வது வாடிக்கையாக உள்ளது. அதேபோல் சிறைச்சாலை வளாகத்தின் வெளியே பயங்கர ஆயுதங்களுடன் சுற்றும் சிலரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுபோன்ற மர்ம முடிச்சுகள் இதுவரை அவிழ்க்கபடவில்லை. இதனால், சிறைத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறதா என்ற சந்தேகமும் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சிறைச்சாலை வளாகத்தில் சுற்றுச்சுவர் அருகே பாகிஸ்தான் நாட்டின் தேசிய கொடியை சிறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புழல் சிறைச்சாலையில் நேற்று காலை சிறை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் ஓரமாக சென்றபோது, அங்குள்ள உயர்மட்ட பாதுகாப்பு சிறை அருகே கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அட்டை பெட்டி கேட்பாராற்று கிடந்தது.
அதில் வெடிகுண்டு இருக்குமோ என்ற பீதியில் சிறைச்சாலை ஜெயிலர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் அங்கு வந்து சோதனை நடத்தினர்.
அந்த பெட்டியில், பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கொடி கம்பத்தில் ஏற்றப்படும் அளவு கொண்ட ஒரு பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடியும், சட்டையில் குத்திக்கொள்ளும் அளவு கொண்ட 103 கொடிகளும் மற்றும் விலை உயர்ந்த ஒரு செல்போனும் அதில் இருந்தன.
இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடி, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், புழல் சிறையில் உள்ள யாருக்கோ அந்த கொடிகள் மற்றும் செல்போனை கொடுக்க சிறைக்கு வெளியே இருந்து வீசப்பட்டுள்ளது. சுவரை தாண்டி வீசியபோது, தவறி சுவர் ஓரம் விழுந்து இருக்கலாம் என்று தெரிகிறது.
கைப்பற்றப்பட்ட செல்போன் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து அது யாருடையது? என்பதையும், சிறையில் உள்ள யாருக்காக அந்த செல்போனை வீசினார்கள்? எனவும் போலீசார் விசாரிக்கின்றனர்.
எதற்காக பாகிஸ்தான் கொடிகளை புழல் சிறையில் வீசினார்கள், இதன் மூலம் சிறைக்குள் கலவரம் ஏற்படுத்த திட்டமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் புழல் சிறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
