பிரபல சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ராவின் 2 மகன்கள் மீது மேலும் ஒரு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.3.6 கோடி கேட்டு மிரட்டுவதாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல சினிமா பைனான்சியர் எஸ்.முகுந்சந்த் போத்ரா. இவர், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கஸ்தூரி ராஜா மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். தயாரிப்பாளர் சதீஷ்குமார், பைனான்சியர் போத்ராவிடம் பணம் வாங்கியுள்ளார். அந்த பணத்தை போத்ராவிடம் திருப்பி செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போத்ரா மற்றும் அவரது மகன்கள் இரண்டுபேரும் கந்து வட்டி பணம் கேட்டு மிரட்டி வருவதாக சதீஷ்குமார் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், போத்ரா மற்றும் அவரது மகன்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அதைதொடர்ந்து, ஓட்டல் உரிமையாளர் செந்தில் கணபதி என்பவர், போத்ராவின் மகன்கள் மீது புகார் அளித்தார். அந்த புகாரில் தான் ரூ.1.40 கோடி, போத்ராவிடம் வாங்கியதாகவும், இதுவரை 2 கோடி ரூபாய் வரை செலுத்தி உள்ளதாகவும் கூறியிருந்தார். இதனால் அவர்கள் மீது 2-வது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகினர்.

இதைதொடர்ந்து நகை வியாபாரி ஹானந்தர் அளித்த புகாரின் அடிப்படையில் போத்ரா மற்றும் அவரது மகன்கள் மீது 3-வது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் இந்த மூன்றாவது புகாரில் போத்ரா மற்றும் அவரது மகன்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் போத்ராவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போத்ராவின் மகன்கள் 2 பேர் மீது மேலும் ஒரு புகார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து சார்பில் அவரது வழக்கறிஞர்கள் இந்த புகாரை அளித்துள்ளனர்.

புகாரில், பொய்யான காசோலையை தயாரித்து ரூ.3.6 கோடி கேட்டு மிரட்டி வந்ததாக போத்ரா மீது பச்சமுத்து சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது.