பீகார் மாநிலத்தவர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்ப்பது மிகவும் ஆபத்தானது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
P. Chidambaram Condemns The Election Commission: பீகாரில் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், பீகாரில் மொத்தமுள்ள 7.9 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் இறப்பு, வாக்காளர்கள் இடம் பெயர்வு மற்றும் 2 இடங்களில் வாக்குரிமை வைத்திருந்தவர்கள் என 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் வாக்காளர்களாகும் பீகாரிகள்
இந்திய வரலாற்றில் இவ்வளவு வாக்காளர்கள் நீக்கப்படுவது இதுவே முதன் முறையாகும். பாஜகவுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பீகாரில் நீக்கப்பட்ட 6.5 லட்சம் வாக்காளர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பீகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் சேர்த்தால் தமிழக மக்களின் உரிமை பறிபோகும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் சட்டவிரோதம்
இது தொடர்பாக ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கப்படும் அபாயத்தில் இருக்கும் நிலையில், பீகாரை சேர்ந்த 6.5 லட்சம் பேரை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்ப்பது பற்றிய செய்திகள் ஆபத்தானவை மற்றும் வெளிப்படையாக சட்டவிரோதமானது. பீகார் தொழிலாளர்களை நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் என்று அழைப்பது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவமதிப்பதாகும்.
தமிழக வாக்காளர்களின் உரிமையில் தலையீடுகிறது
மேலும் தாங்கள் விரும்பும் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் தமிழக வாக்காளர்களின் உரிமையில் கடுமையான தலையிடுதலாகும். ஏற்கெனவே வழக்கத்தில் உள்ளபடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீகார் அல்லது தங்களது சொந்த மாநிலத்துக்கு திரும்பி சென்று ஏன் வாக்களிக்கக் கூடாது? சத் பூஜை விழாவின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீகார் திரும்பவில்லையா?
தமிழ்நாட்டில் எப்படி வாக்காளராகப் பதிவு செய்ய முடியும்?
வாக்காளராகப் பதிவு செய்ய ஒருவருக்கு நிலையான மற்றும் நிரந்தர சட்டப்பூர்வ வீடு இருக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களூக்கு பீகாரில் அல்லது வேறு மாநிலத்தில் அத்தகைய வீடு உள்ளது. அவர்களை தமிழ்நாட்டில் எப்படி வாக்காளராகப் பதிவு செய்ய முடியும்? புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பம் பீகாரில் நிரந்தர வீடு வைத்திருந்து பீகாரில் வாழ்ந்தால் அவர்களை தமிழ்நாட்டிற்கு நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் என்று எவ்வாறு கருத முடியும்?
தமிழ்நாடு முதல்வர் போராட வேண்டும்
தேர்தல் ஆணையம் தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் முறைகளை மாற்ற முயற்சிக்கிறது. தமிழ்நாடு முதல்வர் (மு.க.ஸ்டாலின்) இந்த அதிகார துஷ்பிரயோகத்தை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்த்துப் போராட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
