புதுக்கோட்டை

கால்நடைகள் தீவனம் இல்லாமல் சிரமப்படுவதால், வைக்கோலை வேறு மாநிலத்திற்கு எடுத்துச் செல்லவும், வேறு பயன்பாட்டிற்கோ உபயோகிக்க தமிழக அரசு தடை போட்டுள்ளது என்று ஆட்சியர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த வருட மழை பொழிவு என்பது பொய்த்து விட்டது என்று சொல்லும் அதே நேரத்தில் பெய்த மழையையும் சேகரித்து வைக்காமல் அலட்சியமாய் இருந்து விட்டோம் என்பதை ஒத்துக் கொள்ளதான் ஆகனும்.

இப்படி ஏற்பட்டுள்ள வறட்சியினால் தீவனம் இல்லாமல் கால்நடைகளும் பெரும் சிரமப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கணேஷ் செய்திக்குறிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில், “கால்நடைகளை விற்பனை செய்து கைமாத்துகின்றனர் விவசாயிகள். இதனைத் தடுக்கும் பொருட்டு, உலர் தீவன கிடங்குகள் அமைத்து செயல்படுத்திட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் வைக்கோல் தீவனத்தை மற்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவதையும், பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்வதையும் தடை செய்து அத்தியாவசிய பொருட்கள் சட்டம் பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, வைக்கோலை காளான் வளர்ப்புக்காகவும், தொழிற்சாலைகளில் பொருட்களை சேதமின்றி எடுத்துச் செல்ல உபயோகிக்கவும் தடை செய்யப்பட்டு உள்ளது.

வறட்சியில் இருந்து கால்நடைகளை காப்பாற்ற வைக்கோலை கால்நடைகளுக்கு மட்டும் தீவனமாக பயன்படுத்த வேண்டும்.

மற்ற பயன்பாட்டிற்கோ அல்லது விற்பனை செய்து பிற மாநிலங்களுக்கோ கொண்டு செல்லவோ சட்ட விதிகளின்படி தடை செய்யப்படுகிறது.

மீறி செயல்படுவோர் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955–ன் படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கணேஷ் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.