தொடரும் ஆரஞ்சு அலர்ட்... தமிழகத்தில் நாளை மிக கனமழை எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
புதன்கிழமை தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து நாளையும் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அனைத்து மாவட்டங்களும் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் 17 செ.மீ மழை கொட்டியிருக்கிறது.
இந்நிலையில் நாளை (புதன்கிழமையும்) தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இன்று ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த எச்சரிக்கை நாளையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெளுத்து வாங்கும் மழை! மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா நேரில் ஆய்வு
தென்கிழக்கு வங்கக் கடலில், செவ்வாய் காலையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகினது. பின்னர் அது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறிவிட்டது. இது தற்போது அந்தமான்-நிகோபார் தீவுகளில் நிலை கொண்டிருக்கிறது. புதன்கிழமை காலை இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவாகும் என்று கருதப்படுகிறது.
பின், வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16ஆம் தேதி ஆந்திரக் கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடகிழக்கு திசையில் செல்லும். நவம்பர் 17ஆம் தேதி ஒடிசவை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியை அடையும் என இந்திய வானிலை மையம் கணித்திருக்கிறது.
இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். கடலோர ஆந்திரா, ஏனம், ராயலசீமா பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஒடிசா மாநிலத்தை ஒட்டிய வடமேற்கு வங்க கடலில் மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் புயல் காற்று வீசும். அவ்வப்போது 65 கிமீ வேகத்தில் புயற்காற்று வீசக்கூடும். தமிழக வங்க கடல் பகுதிகளில் 35-45 கிமீ வேகத்தில் காற்று வீசுக்கூடும். அவ்வப்போது 55 கிமீ வேகத்தில் புயல் வீசும். இதனால் மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இச்சூழலில், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியின் ஓரிரு பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலில் சில இடங்களிலும் கனமழையும் பொழியக்கூடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
ஒரு லட்சத்துக்குள் பைக் வாங்கப் போறீங்களா? அதிக மைலேஜ் தரும் பைக்கை பார்த்து வாங்குங்க!