Asianet News TamilAsianet News Tamil

எம்ஜிஆர் நினைவுநாளில் கருணாநிதிக்கு திரையுலகத்தினர் சார்பாக நூற்றாண்டு விழாவா.? தேதியை மாற்றிடுக- ஓபிஎஸ்

தமிழ் திரைப்படத் துறையின் அனைத்து சங்கங்களும் இணைந்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை எம்ஜிஆர் நினைவுநாளில் நடத்தாமல் வேறு ஒரு நாளில் நடத்த ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 
 

OPS request to shift the Karunanidhi centenary celebrations held on behalf of the film industry to another date KAK
Author
First Published Nov 28, 2023, 12:49 PM IST | Last Updated Nov 28, 2023, 12:49 PM IST

கருணாநிதி நூற்றாண்டு விழா

முன்னாள் முதலமைச்சர்கருணாநிதிக்கு திரையுலகத்தினர் சார்பாக டிசம்பர் 24 ஆம் தேதி நூற்றாண்டு விழா நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தன்னுடைய திரைப்படங்கள் மூலம் நல்ல சிந்தனைகளையும், கருத்துள்ள பாடல்களையும் மக்கள் மனதிலே பதிய வைத்து, மக்களை நல்வழிபடுத்திய மாபெரும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாவதில் முக்கியப் பங்கு வகித்த பெருமைக்குரியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். "எனது இதயக்கனி எம்.ஜி.ஆர்" என்று பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர் புரட்சித் தலைவர் அவர்கள். 1967 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்பட்டதற்கு அடித்தளமாக விளங்கியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். 

OPS request to shift the Karunanidhi centenary celebrations held on behalf of the film industry to another date KAK

கொடிகட்டி பறந்தவர்

“தம்பி நீ முகத்தைக் காட்டினால் போதும், முப்பது இலட்சம் ஒட்டு வரும்” என்று பேரறிஞர் அண்ணா அவர்களே புரட்சித் தலைவரைப் பார்த்துக் கூறியதை நான் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு, அவருடைய கொள்கைகளை நிலைநாட்டுவதற்காக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக தொடர்ந்து பத்து ஆண்டுகள் இருந்து, மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றிய பெருமைக்குரியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், திரைத் துறை மற்றும் அரசியல் துறை ஆகிய இரண்டிலும் கொடிகட்டி பறந்து, யாரும் எட்ட முடியாத உயரத்தை அடைந்து, வரலாற்றின் பக்கங்களில் ஒரு நிலையான, நிரந்தரமான இடத்தை பிடித்த மகத்தான மக்கள்

எம்.ஜி.ஆர். அஞ்சலி செலுத்தும் நாள்

தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்து 35 ஆண்டுகள் ஆகியும், உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்தவராக இன்றும் அவர் வாழ்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவர் செய்த அளப்பரிய சாதனைகள்தான். இப்படிப்பட்ட மகத்தான தலைவர் மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்ற நாள் டிசம்பர் 24. இந்த நாள், தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள். 

OPS request to shift the Karunanidhi centenary celebrations held on behalf of the film industry to another date KAK

இந்த நாளில், தமிழ் திரைப்படத் துறையின் அனைத்து சங்கங்களும் இணைந்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடுவதாக அறிவித்திருக்கிறது. “வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்கள் மனதில் நிற்பவர் யார் ?" என்ற பாடல் வரிகளுக்கேற்ப, மக்கள் மனங்களில் நீக்கமற நிலைத்திருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் தன்னலமற்ற தியாகங்களை, சாதனைகளை, பணிகளை கருத்தில் கொண்டு, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தினை மற்றொரு நாளில் வைத்துக் கொள்ளுமாறு தமிழ் திரையுலகத்தையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினரையும் கேட்டுக்கொள்வதாக ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

செந்தில் பாலாஜிக்கு பெரிய நோய் இல்லை; இதெல்லாம் சாதாரணம்தான்: ஜாமீன் மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios