இபிஎஸ்யிடம் அதிமுக அலுவலக சாவி...! செக் வைக்கும் ஓபிஎஸ்...உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
அதிமுக தலைமையகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார்.
அதிமுக அலுவலகம் யாருக்கு
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ்- இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்ற போது ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அங்கு ஏற்கனவே கூடியிருந்த எடப்பாடி கே பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கும் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தார்; மேலும் யாரிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் கூறிய பிறகு சாவி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எடப்பாடி கே பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 20ம் தேதி இவ்வழக்கில் அதிமுக தலைமை கழகத்தின் சாவியை எடப்பாடி கே பழனிச்சாமி வசம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு
மேலும் அடுத்த ஒரு மாதத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுக தலைமை கழக அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது எனவும் போதிய பாதுகாப்பு வழங்குமாறு தமிழ்நாடு காவல்துறையை கேட்டுக்கொண்டது. இந்நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகவும் வட்டாட்சியர் தலைமைக் கழகத்தின் சாவியை எடப்பாடி கே பழனிச்சாமி வசம் ஒப்படைத்ததற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் முந்தைய நாட்களில் பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அதிமுக விவகாரம் தொடர்பாக எத்தனை வழக்குகள் தான் உள்ளது? என கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு வழக்காக அதிமுக தலைமை அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டதற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்