டெல்லியில் மத்திய உள்துறை அமித்ஷாவை சந்தித்து பேசியது என்ன? தனிக்கட்சி தொடக்கமா? என்பதற்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. அதிமுகவை ஒன்றிணைப்பேன் என சபதம் எடுத்த செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அனைவரும் எதிர்பாராதவிதமாக அவர் தவெகவில் இணைந்தார். அதே வேளையில் அதிமுகவில் இருந்து ஏற்கெனவே நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கட்சியில் இணைய துடித்து வருகிறார்.
அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ்
ஆனால் எடப்பாடி பழனிசாமி அவரை சேர்க்க மறுத்து வருகிறார். இதற்கிடையே திடீரென டெல்லி சென்ற ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்குவதற்காக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததாக தகவல் வெளியானது. மேலும் அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்ததாக தகவவல்கள் கூறின. இந்த நிலையில், டெல்லியில் அமித்ஷாவிடம் பேசியது என்ன? என்பது குறித்து ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.
அமித்ஷாவிடம் பேசியது என்ன?
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ''டெல்லி சென்று அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். அவரிடம் தமிழக அரசியலின் இன்றைய சூழ்நிலை குறித்து பேசினேன். அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் இணைய வேண்டும் என்ற தொண்டர்களின் விருப்பத்தை அவரிடம் எடுத்துரைத்தேன்'' என்று தெரிவித்தார்.
செங்கோட்டையனுடன் பேசவில்லை
தொடர்ந்து செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், ''செங்கோட்டையன் என்னிடம் ஏதும் பேசவில்லை. அவரிடம் நான் ஏதும் பேசவில்லை'' என்று தெரிவித்தார். 'தொடர்ந்து நீங்கள் தனிக்கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் பரவுகின்றன' என்று செய்தியாளர்கள் ஓபிஎஸ்ஸிடம் கேட்டனர்.
தனிக்கட்சி ஆரம்பிக்கவில்லை
இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், ''இந்த கேள்வியே தவறானது. நான் எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி ஆரம்பிப்பதாக சொல்லவே இல்லை. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்'' என்றார். ஓபிஎஸ் அமித்ஷாவை சந்தித்துள்ள நிலையில், அதிமுகவில் பெரிய மாற்றங்கள் நிகழலாம் என அரசியல் நிபுணர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


