தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவு; உதகையில் மலை ரயில் சேவை ரத்து
உதகையில் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் உதகைக்கு மலை ரயில் போக்குவரத்து இயக்க பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை ரயில் தண்டவாளத்தில் பல்சக்கரத்தால் ரயில் பெட்டிகளை இழுத்து செல்வதுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள்ளும் மலை முகடுகள், பாறை குகைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ரயில் பாதையில் பயணிப்பதால் இந்த ரயிலில் பயணம் செய்து இயற்கை அழகினை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் முன்பதிவு செய்து காத்திருந்து பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மழை காலங்களில் இந்த மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்து தண்டவாளங்கள் சேதமடைவது வழக்கம். இந்நிலையில் மலை ரயில் பாதை அமைந்துள்ள ஹில்கிரோ ஆடர்லி இடையே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ரயில் தண்டவாளம் சேதமடைந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதனால் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு 160 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்டு சென்ற மலை ரயில் கல்லார் ரயில் நிலையத்தில் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மண்சரிவு சீரமைக்க பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பணிகள் முழுமை பெற காலதாமதம் ஏற்படும் என்ற தகவலை அடுத்து இன்று ஒரு நாள் மட்டும் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனையடுத்து கல்லார் ரயில் நிலையத்தில் இருந்து மலை ரயில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் ரயில்வே நிர்வாகம் சார்பில் பேருந்து ஏற்பாடு செய்யபட்டு பயணிகள் பேருந்து மூலம் குன்னூர் அனுப்பி வைக்கப்பட்டனர். மலை ரயிலில் பயணம் செய்து இயற்கை அழகினை கண்டு ரசிக்க வந்த ரயில் பயணிகள் ஏமாற்றத்துடன் பேருந்தில் சென்றனர்.