Asianet News TamilAsianet News Tamil

தாத்தா, தந்தை காக்டெயில்: செயலால் சொல்லி அடிக்கும் சின்னவர்!

தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது

One year completed for udhayanidhi stalin as a minister smp
Author
First Published Dec 14, 2023, 6:08 PM IST | Last Updated Dec 14, 2023, 6:08 PM IST

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல்வாதியாக ராஜதந்திரியாக திகழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி. அதேபோல், மிகவும் கண்டிப்புடன் கட்சியை வழிநடத்துவதில் வல்லவராக திகழ்பவர் முதல்வர் ஸ்டாலின். இவர்கள் இருவரின் கலவையாக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின்.

திமுக தலைவர் ஸ்டாலின் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தன் வசம் வைத்திருந்த அதிகாரமிக்க பதவியான திமுக இளைஞரணிச் செயலாளராக கடந்த 2019ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். பதவியேற்ற அடுத்த சில நாட்களிலேயே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம். நிர்வாகிகள் கூட்டம் என்று சுணக்கமாக இருந்த இளைஞரணியை கட்டி எழுப்பினார் உதயநிதி ஸ்டாலின்.

செயலாளர் பதவி வழங்கப்பட்டது முதலே, இளைஞரணியை துடிப்புடன் வைத்து வருகிறார் உதயநிதி. இளைஞரணிக்கு உறுப்பினர்களை சேர்ப்பது, இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பட்டறை, நலத்திட்ட உதவிகள் என பல்வேறு விஷயங்கள் உதயநிதியின் முன்னெடுப்பில் செய்யப்பட்டு வருகின்றன. 

அத்துடன், கடந்த மக்களவை தேர்தலின் போது உதயநிதியின் பிரசாரம் திமுகவுக்கு மிகவும் கை கொடுத்தது. ஒற்றை செங்கலை வைத்துக் கொண்டு தேசிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அக்கட்சியின் வெற்றிக்கு உதயநிதியின் பங்கு அளப்பரியது என இன்றும் சிலாகிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

இதையடுத்து, கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றார். அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், வாரிசு அரசியல் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் எழும் என்ற காரணத்தால் அப்பதவி அப்போது வழங்கப்படவில்லை.

இருப்பினும், வெற்றி பெற்ற முதல் நாளில் இருந்தே தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து விசிட் அடிக்கும் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். தேங்கிக் கிடக்கும் குப்பைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி அகற்றுவது, சாக்கடை நீர் தேங்காமல் அதனை தூய்மைப்படுத்துவது என பம்பரமாக சுழன்று வேலை பார்த்து வருகிறார். இதன் விளைவாக அருகாமையில் இருக்கும் தொகுதி மக்களிடம் கூட பாராட்டுகளை பெற்று வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற  தூபம் போடப்பட்டது. அமைச்சர்கள் வெளிப்படையாக கோரிக்கை விடுத்தனர். உதயநிதி அரசியலில் அடியெடுத்து வைத்த போதே அவருக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததுதான். இருப்பினும், ஸ்டாலினுக்கு இருந்த காத்திருப்பு உதயநிதிக்கு இல்லை. இதற்கு கடந்தகால கசப்பான சம்பவங்களும் காரணமாக இருக்கலாம். சிறிது கால காத்திருப்புக்கு பின்னர் உதயநிதிக்கு உடனடியாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதுதவிர, சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்புத்திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் துறைகளும் உதயநிதிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது. அத்துடன், திமுக அமைச்சரவை சீனியாரிட்டி பட்டியலில் உதயநிதி ஸ்டாலினுக்கு 10ஆவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஆனால், இத்தகைய விமர்சனங்களுக்கும் உதயநிதி ஸ்டாலின் தனது செயலால் பதிலடி கொடுத்து வருகிறார்.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கொத்து கொத்தாக சஸ்பெண்ட்: நாடாளுமன்றத்துக்குள் போராட்டம்!

கடந்த ஆண்டு இதே நாளில் அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின், 2022-23ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான கபடிப் போட்டி நடத்துவதற்கான கோப்பில் முதல் கையெழுத்திட்டார். மேலும், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.3000 லிருந்து ரூ.6000 ஆக அதிகரித்து வழங்கும் கோப்பிலும் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவேன் என்றும், விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதிலடி கொடுப்பேன் எனவும் பேட்டியும் அளித்தார் அவர். அதன்படி, உதயநிதி அமைச்சரான பின்னர் அந்ததுறையில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. ஆசிய ஹாக்கிப் போட்டி சென்னையில் மீண்டும் நடைபெற்றது. ஃபார்முலா கார் பந்தயம் நடைபெறவுள்ளது. அமைச்சராக இல்லாவிட்டாலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னின்று நடத்தினார் உதயநிதி ஸ்டாலின்.

சனாதனம் குறித்த தனது கருத்தில் வலுவாக நின்றது அவரது இமேஜை மேலும் உயர்த்தியது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செங்கலை காட்டியதுபோல, நீட்டை ஒழிப்பதில் விடாப்படியாக இருக்கும் உதயநிதி, நீட் தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக நிர்ணயித்தபோது முட்டையை காட்டி சம்பவம் செய்தார். தனது செயல்கள் மூலம் தொடர்ந்து மக்கள் மனதில் இடம் பிடித்தும் வருகிறார்.

கட்சியில் ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஆட்சியிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. மூத்த அமைச்சர்கள் பலரும் தங்களது தொகுதியில் மேற்கொள்ளப்படும் நலத்திட்டங்களை உதயநிதி ஸ்டாலினை வைத்தே தொடங்கி வைத்து வருகின்றனர். சட்டமன்றத்திலும் ஸ்டாலினுக்கு நிகராக உதயநிதியின் புகழ் பாடப்படுகிறது. திமுகவின் எதிர்காலமாக பார்க்கப்படும் சின்னவருக்கு ஓராண்டு அமைச்சர் தின வாழ்த்துக்கள்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios