எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கொத்து கொத்தாக சஸ்பெண்ட்: நாடாளுமன்றத்துக்குள் போராட்டம்!
மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொத்து கொத்தாக பணியிடை நீக்கம் வருகின்றனர்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் நேற்று பூஜ்ஜிய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த போது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இருவர் அத்துமீறி இருக்கையில் குதித்தனர். தொடர்ந்து, அவையில் மையப்பகுதிக்கு செல்ல முயன்ற அவர்கள், தாங்கள் கையில் மறைத்து வைத்திருந்த புகை உமிழும் கருவியை வெடிக்க செய்தனர். அதில் இருந்து வண்ண வாயு வெளிப்பட்டது. அதேபோல், நாடாளுமன்றத்தின் வெளியேயும் புகை உமிழும் கருவி வீசப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக 2 ஆண், 2 பெண் என மொத்தம் 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கைதான 4 பேர் மீதும் உ.பா.சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் குறித்து விரிவான தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா அவையிலேயே தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொத்து கொத்தாக பணியிடை நீக்கம் வருகின்றனர்.
நாடாளுமன்றத் தாக்குதல்: பாதுகாப்பு அதிகாரிகள் 8 பேர் சஸ்பெண்ட்; சிறப்பு பிரிவுக்கு வழக்கு மாற்றம்
நாடாளுமன்றத்தில் இன்றைய அவை நடவடிக்கைகள் தொடங்கியதும், நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, அவர்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கொண்டு வந்தார். அத்தீர்மானம் நிறைவேறியதைத் தொடர்ந்து, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அவை நடவடிக்கைகளில் இருந்து குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடு குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டதற்காக எதிர்கட்சி எம் பி க்கள் பத்துக்கும் மேற்பட்டோர் மக்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளோம். pic.twitter.com/cmrEE6xsL5
— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 14, 2023
தமிழ்நாட்டில் இருந்து மட்டும் எம்பிக்கள் பி.ஆர்.நடராஜன், கனிமொழி, சுப்புராயன் எஸ்.ஆர்.பார்த்திபன், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தவிர மற்ற எம்பிக்கள் பென்னி, விகே ஸ்ரீகண்டன், முகமது ஜாவித் உள்ளிட்ட பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, மக்களவைக்குள்ளேயே சஸ்பெண்ட் செய்யப்ப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.