நாடாளுமன்றத் தாக்குதல்: பாதுகாப்பு அதிகாரிகள் 8 பேர் சஸ்பெண்ட்; சிறப்பு பிரிவுக்கு வழக்கு மாற்றம்!
நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் நேற்று பூஜ்ஜிய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த போது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இருவர் அத்துமீறி இருக்கையில் குதித்தனர். தொடர்ந்து, அவையில் மையப்பகுதிக்கு செல்ல முயன்ற அவர்கள், தாங்கள் கையில் மறைத்து வைத்திருந்த புகை உமிழும் கருவியை வெடிக்க செய்தனர். அதில் இருந்து வண்ண வாயு வெளிப்பட்டது.
இதையடுத்து, எம்.பி.க்கள் உதவியுடன் அவர்களை பிடித்த அவைக் காவலர்கள் அவர்களை போலீசாரிசம் ஒப்படைத்தனர். அதேபோல், நாடாளுமன்றத்தின் வெளியேயும் புகை உமிழும் கருவி வீசப்பட்டது. அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 2 ஆண், 2 பெண் என மொத்தம் 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில் மக்களவை செயலகத்தை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம், நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம் தொடர்பான விசாரணை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கைதான 4 பேர் மீதும் உ.பா.சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 4 பேரின் கல்விப் பின்னணி, போராட்ட நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டது குறித்து சிறப்பு பிரிவு போலீசார் விசாரானை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியை திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது: உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
முன்னதாக, மக்களவையின் உள்ளே தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவரது பெயர் சாகர் ஷர்மா எனவும், மற்றொருவர் பெயர் மனோரஞ்சன் என்பதும் தெரியவந்துள்ளது. மைசூர் மாநிலத்தைச் சேர்ந்த மனோரஞ்சன், பொறியியல் படித்து வரும் மாணவர் ஆவார். அதேபோல், நாடாளுமன்றத்துக்கு வெளியே தாக்குதல் நடத்திய இரண்டு பெண்களின் பெயர் நீலம், அன்மோல்ஷிண்டே எனவும், அவர்களில் ஒருவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் மற்றொருவர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு-குடகு மக்களவை தொகுதி பாஜக எம்.பி.யான பிரதாப் சிம்ஹா என்பவர் கையெழுத்திட்ட நுழைவு சீட்டை (entry pass) நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த இருவரும் பயன்படுத்தியதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரிவான தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.