விருதுநகர்

டாஸ்மாக் சாராயக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களில் ஒருவரை காவலாளர்கள் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடை மீது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

வீசிய பெட்ரோல் குண்டு குறி தவறியதால் சுவற்றின்மீது பட்டு வெடித்துச் சிதறியது. இதனால் கடைக்கு முன்பு குவிக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகள், கழிவுப்பொருட்கள் மீதும், குப்பை மீதும் தீ பற்றியது. பின்னர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இதுகுறித்து வத்திராயிருப்பு காவலாளர்கள் விசாரணை நடத்தியதில் கடைக்கு பின்புறம் உள்ள தோப்புகளிலிருந்து வந்த மர்ம நபர்கள் கடைக்குள் குண்டு வீசி ஒட்டுமொத்த கடைக்கும் தீவைக்க முயற்சி செய்தது தெரிந்தது.

பின்னர் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர். இதில் தொடர்புடைய வத்திராயிருப்பு மேலப்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் (25), என்பவரை காவலாளர்கள் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவான மற்றவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.