திருவாரூர்

நியாயவிலைக் கடைகளில் மைசூர் பருப்பு நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக துவரம் பருப்பு அல்லது கனடியல் பருப்பானது குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வீதம் வழங்கப்பட உள்ளது என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளையொட்டி, திருவாரூரில் மாவட்ட அதிமுக சார்பில் 79 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற இருக்கிறது.

வன்மீகபுரம் அம்மா அரங்கத்தில் நடைபெற உள்ள இந்த திருமண விழாவுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அந்தப் பேட்டியில் கூறியது: "சென்னையில் நடைபெற்ற அம்மா ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமரிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக காவிரி டெல்டா விவசாயிகள் சார்பில் நன்றி.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியே முதல்வரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் கண்டிப்பாக அமையும்.

நியாயவிலைக் கடைகளில் மைசூர் பருப்பு நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக துவரம் பருப்பு அல்லது கனடியல் பருப்பானது குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வீதம் வழங்கப்பட உள்ளது.

காலதாமதமாக சாகுபடி மேற்கொண்ட விவசாயிகள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். தண்ணீர் பெறுவதற்கான முயற்சிகளை தமிழக முதல்வர் எடுத்து வருகிறார். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்கள் வராமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.