அவினாசி அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை காலிக் குடங்களுடன் முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.

திருப்பூரை அடுத்துள்ள பெருமாநல்லூர் அருகே காளிபாளையத்தில் குடிநீர் மற்றும் போர்வெல் தண்ணீர் சீராக கிடைப்பதில்லை என்பதால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் குடிநீர் கேட்டு காளிபாளையம் ஊராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர்.

காளிபாளையம் பகுதியில் 2500 குடும்பங்களை சேர்ந்த 13 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் போர்வெல் தண்ணீர் முறையாக வழங்கப்படுவதில்லை. பத்து நாட்களுக்கு ஒரு முறை கிடைக்கும் தண்ணீரும் சிறிதளவே கிடைக்கிறது.

கடுமையான வறட்சி காரணமாக நிலத்தடி நீர்மட்டம் மிகவும் கீழே சென்றுவிட்டது. கிணறுகளிலும் தண்ணீர் கிடைப்பதில்லை.

இதுகுறித்து பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே பொதுமக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ஊராட்சி பகுதி முழுவதும் தண்ணீர் தினசரி வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தினர் வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
15 நாட்களுக்குள் இதற்கு தீர்வு காணப்படும் என அவர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அப்பெண்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

இதனால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.