Once the Idro Carbon Project does not penetrate the pipeline the struggle will erupt again - people alert ....

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் உள்ள ஐட்ரோகார்பன் திட்ட ஆழ் குழாயை அகற்ற விடுவோம் என்று சொன்ன ஆட்சியர் சொன்னபடி செய்யாததால் விரைந்து குழாயை அகற்றவேண்டும் இல்லாவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று மக்கள் எச்சரித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ளது கோட்டைக்காடு கிராமம். இங்கு கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு மண்ணெண்ணெய் எடுப்பதற்கான பரிசோதனை என்று கூறி ஓ.என்.ஜி.சி நிறுவனம் விவசாய நிலங்களில் சுமார் 1000 அடி ஆழத்தில் ஆழ்குழாய் கிணறு தோண்டியது.

அதில், குழாய்கள் பொருத்தப்பட்டு கழிவு நீர் தொட்டிகளும் அமைக்கப்பட்ட நிலையில் ஐட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் போராட்டம் தொடங்கியது.

அதனையடுத்து கோட்டைக்காடு கிராமத்திலும் மக்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் "கோட்டைக்காடு கிராமத்தில் ஐட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது" எனவும் "ஒரு சில மாதங்களில் ஐட்ரோ கார்பன் திட்ட ஆழ் குழாய்கள் அகற்றப்பட்டு கழிவுநீர் தொட்டிகள் மூடப்படும்" எனவும் அறிவித்தனர்.

இந்த நிலையில், "அதிகாரிகள் உறுதியளித்து பல மாதங்கள் ஆகியும் ஐட்ரோ கார்பன் திட்ட ஆழ் குழாயை அகற்றவோ, கழிவு நீர் தொட்டியை மூடவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பருவ மழைத் தொடங்கியுள்ள இந்தக் காலத்தில் விவசாயம் நிறைந்த கோட்டைக்காடு கிராமத்தில் முழுமையான விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

எனவே, கோட்டைக்காடு கிராமத்தில் உள்ள ஐட்ரோ கார்பன் திட்ட குழாயையும், கழிவுநீர் தொட்டிகளை மூடி விவசாய நிலத்தை சமப்படுத்தித் தரவும் மற்றும் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு மீண்டும் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும்" என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் போராட்ட குழுவினர் வலியுறுத்தி உள்ளனர்.

இவற்றை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.