பூந்தமல்லி அருகே தனியார் பேருந்து ஒன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அதிர்ஷ்டவசமாக  42 பயணிகள் உயிர்தப்பினர். 

பெங்களூரில் இருந்து  இன்று அதிகாலை தனியார் ஆம்னி பேருந்து 42 பயணிகளை ஏற்றி கொண்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. 

இந்த பேருந்தை பெங்களூரைச் சேர்ந்த ஓட்டுனர் ஸ்ரீதரா ஓட்டி வந்தார். இன்று காலை பேருந்து திருமழிசை சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது பேருந்தின் பின்பக்கத்தில் உள்ள என்ஜினில் இருந்து புகை வெளியே வந்தது. 

இதை பார்த்த வாகன ஓட்டிகள் உடனே ஸ்ரீதராவிடம் இதுகுறித்து தெரிவித்தனர். அவர் பயணிகளை உடனடியாக பஸ்சை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினார்.

இதையடுத்து பயணிகள் அனைவரும் தங்களது உடமைகளை அவசர அவசரமாக எடுத்துக் கொண்டு கீழே இறங்கினர்.

சிறிது நேரத்தில் என்ஜினில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீ மளமளவென கொளுந்து விட்டு எரிந்ததில் பேருந்து முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. 

இதைதொடர்ந்து இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.