தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளன. சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.4100 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் வரும் 20ம் தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதன் காரணமாக வழக்கமான ரயில்களிலும், சிறப்பு ரயில்களிலும் டிக்கெட்டுகள் காலியாகி விட்டன.
ரயில், பேருந்துகளில் இருக்கைகள் நிரம்பின
தீபாவளியையொட்டி தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வரும் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலான 4 நாட்களில் மொத்தம் 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி முடிந்து சென்னை திரும்புவதற்கும் 15,129 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களிலும், அரசு பேருந்துகளிலும் இருக்கைகள் காலியாகி விட்டதால் மக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளை அதிகம் நம்பியுள்ளனர்.
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்
இதை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ள ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன. அதாவது சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.4,100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து நெல்லைக்கு ரூ.6,000, சென்னை டூ நாகர்கோவில் ஆறாயிரத்துக்கும் அதிகமாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
பல மடங்கு கட்டணம் உயர்வு
வழக்கமாக சென்னையில் இருந்து மதுரைக்கு தனியார் பேருந்துகளில் அதிகப்பட்சமாக ரூ.1,000 வரை தான் கட்டணம் இருக்கும். ஆனால் இப்போது பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். பண்டிகை காலங்களில் தேவை அதிகரிப்பதைப் பயன்படுத்தி, சில ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.
பயணிகள் குற்றச்சாட்டு
ஆம்னி பேருந்துகளின் ஆன்லைன் முன்பதிவு தளங்களில் கட்டணங்கள் வெளிப்படையாகக் காட்டப்படுவதில்லை எனவும், கடைசி நிமிடத்தில் கூடுதல் கட்டணங்கள் சேர்க்கப்படுவதாகவும் பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த அதிகப்படியான கட்டண வசூல், பொருளாதார ரீதியாக நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள பயணிகளை பெரிதும் பாதிக்கிறது. ஆம்னி பேருந்து நிறுவனங்களின் இந்தக் கட்டண உயர்வு கட்டண கொள்ளை என சமூவலைத்தளங்கள் வாயிலாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
தமிழக அரசு தலையிட வேண்டும்
தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, ஆம்னி பேருந்துகளின் கட்டண நிர்ணயத்திற்கு ஒரு ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கட்டண விவரங்கள் முன்பதிவு செய்யும் முன் தெளிவாக வெளியிடப்பட வேண்டும் என்றும், எந்தவித மறைமுகக் கட்டணங்களும் சேர்க்கப்படக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
