Asianet News TamilAsianet News Tamil

#BREAKING: ’ரிஸ்க்’ நாட்டில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா..! - ஒமைக்ரான் பரிசோதனை எடுக்க முடிவு

Omicron : புதிதாக உருமாறியுள்ள ஒமைக்ரான் வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், ஆபத்தான பட்டியலில் உள்ள நாட்டிலிருந்து வந்த 8 பேரில் ஒரு குழந்தை உட்பட இருவருக்கு கோரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர்களது மாதிரி, ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 

Omicron Corona Alert
Author
Chennai, First Published Dec 3, 2021, 6:22 PM IST

Omicron: இன்று காலை லண்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த 8 பேரில் ஒரு குழந்தை உட்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 8 பேரும் கிண்டி கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று உறுதி செய்யப்பட்ட 2 பேர் உட்பட யாருக்கும் எவ்வித அறிகுறிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஓமைக்ரான் உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவர்களின் மாதிரிகள் மரபியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இரண்டு வாரங்களுக்கு முன்பு லண்டனில் இருந்த போது தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் முடித்து திரும்பிய நிலையில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தவருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. தொற்று உறுதியான தஞ்சை நபருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உள்ளதா என கண்டறிய மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ஓமைக்ரான் கொரோனா பரவிய நிலையில் தஞ்சை நபரின் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. பரிசோதனைக்கு பிறகு அவருக்கு எந்த வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது தெரியவரும். 

Omicron Corona Alert

மேலும் சென்னை, மதுரை , நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கை தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை , ஒமந்துரார் பன்னோக்கு மருத்துவனை ,கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் ஒமைக்ரான் சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கபட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24ம் தேதி ஒமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. இந்த ஒமைக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசி இதனை கட்டுப்படுத்தாது எனவும் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் பரவலை  கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.

இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஒமைக்ரான் வகை வைரஸ் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.  இது 32 முறை உருமாற்றமடைந்து ஒமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமைக்ரான், தற்போது பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட 34 உலக நாடுகளில் பரவியுள்ளது.

Omicron Corona Alert

இந்நிலையில், தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட ஒமைக்ரான் பரவிய 35க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிப்பட்டு வருகின்றனர். அதன்படி, ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்த விமான நிலையத்திலேயே தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios