சென்னையில், மீன்களை உண்பது குறித்த அச்சத்தைப் போக்கும்வகையில், சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் வியாபாரிகள் வஞ்சிர மீன்களை வறுத்து பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்தனா்.

கடந்த 27-ம் தேதி சென்னை – எண்ணூர் துறைமுகம் அருகே 2 சரக்கு கப்பல்கள் மோதிக் கொண்ட விபத்தில் கடலில் எண்ணெய் படலம் படிந்தது. இதை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இதனிடையே, சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் 50க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தான் நொச்சிக்குப்பம், நடுக்குப்பம் உள்ளிட்ட மீன் மார்க்கெட்டுக்கு வியாபாரத்துக்கு மீன்கள் செல்கிறது.

மேலும், சைக்கிளில் சென்று மீன் விற்பவர்களும் இங்கிருந்துதான் வாங்கி செல்கின்றனர். இந்தநிலையில், எண்ணூருக்கு அருகில் கப்பல்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கடலில் கச்சா எண்ணெய் கலந்தது.

இதனால், மீன்கள், ஆமை மற்றும் கடல் நண்டு உள்பட பலவும் செத்து மிதக்கின்றன. மேலும் கச்சா எண்ணெய் கலந்த மீன்களை சாப்பிட்டால் நோய் வரும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, மீன்களை உண்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில், சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் வஞ்சிர மீன்களை வறுத்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.

சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் முன்பு வஞ்சிர மீனை வறுத்த வியாபாரிகள், அங்கு மீன் வாங்க வருபவர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி அவ்வழியே வந்த பேருந்துகளில் இருந்த பயணிகளுக்கும் வழங்கினர்.

எண்ணெய் படலம் குறித்த அச்சத்தால், மீன்களை விற்கும் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப் பட்டிருப்பதாக அவர்கள் கூறினர்.

சிந்தாதிரிப்பேட்டையில் விற்கப்படும் மீன்கள் ஆழ்கடலில் பிடிக்கப்பட்டு, வெளிமாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படுபவை என்றும் மீன் வியாபாரிகள் கூறினர். மேலும், எண்ணெய் படலத்தால் ஆமைகள் செத்து கரைஒதுங்கியபோதும், மீன்கள் உயிரிழக்கவில்லை என்றும் அவர்கள் விளக்கினர். இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 4 ஆயிரம் பேருக்கு வஞ்சிர மீன்கள் வறுத்து பறிமாறப்பட்டன.